மெரினா, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் இலவச வைஃபை: சேவை வழங்கும் நிறுவனத்துடன் மாநகராட்சி ஆலோசனை

102 0

 சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்குவது தொடர்பாக, சேவை வழங்கும் நிறுவனத்துடன் மாநகராட்சி, சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். சென்னை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை உள்ளன. இப்பகுதிகளுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்கள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவ்விரு கடற்கரைகளையும், மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்ட நிதியில் தமிழக சுற்றுலாத் துறை மூலமாக மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள், சக்கர நாற்காலிகள் மூலமாகச் சென்று கடல் அலைகளில் கால்களை நனைத்து ரசிக்கஏதுவாக ஏற்கெனவே இத்திட்டத்தின் கீழ் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சுற்றுலாத் துறை மூலமாக இவ்விரு கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு இலவச வைஃபை வசதி வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

24 மணி நேரமும்.. இந்நிலையில் வைஃபை சேவை வழங்கும் நிறுவன அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதில் இந்த சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், இணையச் சேவையை 24 மணி நேரமும் இலவசமாக வழங்குவதாகவும், இதற்காக மாநகராட்சி நிர்வாகம் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை எனவும், ஆனால் மின்சார வசதி, உபகரணங்களை நிறுவுமிடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாநகராட்சி வழங்க வேண்டும் என்றும் சேவை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பதில் அளிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள், சேவை வழங்கும் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். கடற்கரைகளில் எத்தனை இடங்களில் அமைப்பது என்பது குறித்து இறுதி செய்யப்பட்டு, மாநகராட்சி மற்றும் சேவை வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதன் பின்னர் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.