போசாக்கு குறைந்த குழந்தைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம்

147 0

பாடசாலை மட்டங்களில் போசாக்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நேற்று (27-09-2022) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் விசேட செயற்றிட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய வேலை திட்டங்களில் ஒன்றான உணவு பாதுகாப்பு தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிராம மட்டங்களிலும் இந்த குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் தொடரப்பட்டுள்ளன.

உணவு பஞ்சம் ஏற்படாதவாறும் போசாக்கு நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும் இவ்வாறான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பாடசாலைகள் மட்டத்திலே போசாக்கு அச்சுறுத்தலான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கான விசேட வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.

இந்த செயற்றிட்டத்துக்காக அனைவரது ஒத்துழைப்புகளும் அவசியமாகும்.

இதன்போது பெற்றோர்கள், பாடசாலை சமூகம் ஆகியோரினுடைய முழுமையான ஒரு கூட்டுப் பொறுப்புடன் இவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.