இலங்கைக்கு கடன் வழங்குவதில் இந்தியா முதலிடம் – 4 மாதங்களில் 968மில்லியன் டொலர்கள்!

91 0

2022ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் மொத்தம் 968 மில்லியன் டொலர்கள் கடனை இந்தியா இலங்கைக்கு வழங்கியதன் மூலம் இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக இந்தியா உருவெடுத்துள்ளது.

இலங்கைக்கு கடன்வழங்கும் செயற்பாட்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தினைப் பிடித்துள்ளது.

2017-2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், சீனா 947 மில்லியன் டொலர்கள் கடனை இலங்கைக்கு வழங்கியதால் இலங்கைக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக சீனா முதலிடத்தில் இருந்தது.

சீனா வழங்கிய கடனில் 809 மில்லியன் டொலர்கள் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து சந்தைக் கடனாகப் பெறப்பட்டுள்ளதாக டெய்லி பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கான மிகப்பெரிய பலதரப்பு கடன் வழங்குனராக இருந்ததாகவும், 2021 ஆம் ஆண்டில் 610 மில்லியன் டொலர்கள் நிதியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பும் ஆணைக்குழு மற்றும் சமானத்தினை கட்டியெழுப்பும் நிதியம் அறிக்கைகள் மீதான விவாதத்தில், ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ், இலங்கைக்கு உணவு மற்றும் நிதி உதவியாக இந்தியா கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்தார்.

‘கடந்த சில மாதங்களில் உணவு மற்றும் நிதி உதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எங்களின் நல்ல நண்பரும் அண்டை நாடாகவும் உள்ள இலங்கைக்கும் தொடர்ந்து உதவி வருகிறோம்,’ என கம்போஜ் கூறினார்.

கடந்த ஓகஸ்ட் 22ஆம் திகதி, ‘நட்பு மற்றும் ஒத்துழைப்பின் காரணமாக இந்தியாவின் சிறப்பு ஆதரவின் கீழ் வழங்கப்பட்ட 21,000 தொன் உரங்களை உயர்ஸ்தானிகர் முறைப்படி இலங்கை மக்களுக்கு கையளித்தார்’ என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்தியா சுமார் 4 பில்லியன் டொலர்கள் வழங்ப்பட்டதைத் தொடர்ந்து 44,000 மெற்றிக் தொன் உரத்தை உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் இந்தியா இலங்கை விவசாயிகளுக்கு வழங்கியிருந்தது.

இலங்கையின் தேவைக்கேற்ப பொருளாதார உதவிகளை வழங்குவதில் இந்தியா முன்னணியில் இருப்பதுடன், தேவைப்படும் நேரத்தில் அதிகபட்ச உதவிகளை வழங்கிய நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அரசாங்கம் அதன் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவில்லை.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பொருளாதாரம் வீழ்ச்சியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.