அரசியல் தீர்வு மாய வித்தையா ?

140 0

“என்னதான் ரணில் விக்கிரமசிங்க தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டாலும், அவரை ஆட்சி பீடம் ஏற்றிய பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதம் இல்லாமல், ஒரு அங்குலம் கூட அதனை நகர்த்த முடியாது”

நாட்டின் முக்கியமான பிரச்சினையான, தேசியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று  அண்மையில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் உரையாற்றிய போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு, பூகோள அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அவர் அங்கு வெளியிட்டிருந்த நிலையில், தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து வெளியிட்ட கருத்து அவ்வளவாக முக்கியத்துவம் பெறவில்லை.

தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், விரைவில், தீர்வு எட்டப்படும் என்றும் ஜனாதிபதி வெளியிட்ட கருத்து அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் விளைவாக, எதிர்பாராத வகையில் ஆட்சிக்கு வந்தவர் தான் ரணில் விக்கிரமசிங்க.

ஒற்றை ஆசனத்தை வைத்துக் கொண்டு, சர்ச்சைகளுக்கு மத்தியில் பாராளுமன்றம் சென்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான ரணில் விக்கிரமசிங்க, எதிர்பாராத வகையில் பிரதமர் பதவியை பிடித்தார். அதனை வைத்துக் கொண்டு ஜனாதிபதி கதிரையையும் எட்டி விட்டார்.

ஆனால், நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், அவரிடம் இரண்டு விடயங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

ஒன்று நாட்டை ஆட்சி செய்வதற்கான மக்கள் ஆணை. இரண்டு பாராளுமன்றச் செல்வாக்கு.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்குப் போதிய வாக்குகளைக் கூடிப் பெற முடியாத ரணில், அதாவது பாராளுமன்றம் செல்வதற்கான மக்களாணையைக் கூட பெறமுடியாத அவர், பாராளுவதற்கான மக்களாணையை கொண்டிருக்கவில்லை.

ஆனாலும், நாட்டின் அரசியலமைப்புக் குறைபாடுகளும், அரசியல் தலைமைகளின் தவறுகளும் அவரை நாட்டின் தலைவராக்கி விட்டது.

அத்துடன், அவருக்கென பாராளுமன்றத்தில் அரசியல் பலம் கிடையாது. ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொள்ள கூடிய எந்தவொரு உடன்பாட்டையும், சட்டரீதியாக அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் போதிய பலம் தேவை.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியில் ஒரே ஒரு உறுப்பினர் தான் இருக்கிறார்.

இந்த இரண்டும் இல்லாத ஒரு தலைவரால், எவ்வாறு தேசியப் பிரச்சினையை தீர்க்க முடியும்?

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இலங்கையின் சுதந்திரத்துடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை.

இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த தலைவர்கள் எவரும் அதற்குத் தீர்வு காணத் துணியவில்லை.

சில தலைவர்கள், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயன்ற போதும், அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அல்லது கட்சிக்குள் போதிய பலம் இருக்கவில்லை.

மக்களின் ஆணையும், சிங்கள மக்களின் ஆதரவும் பெற்ற தலைவர்களாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள் இந்த விடயத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை.

அவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒன்றில் அதிகபட்ச இனவாதிகளாக நடந்து கொண்டனர் அல்லது பெரும்பான்மைச் சிங்கள மக்களின் நலன்களில் மட்டும் அக்கறை செலுத்தினர்.

அதனால் தங்களின் தற்துணிவின் அடிப்படையில் தேசியப் பிரச்சினையை தீர்க்கின்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்கு வர முன்னரும், ஆட்சியை விட்டு விலகிய பின்னரும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக  ஆக்கபூர்வமான பல கருத்துக்களை வெளியிட்டாலும், ஆட்சிக்காலத்தில் அவரும் ஒரு போர் தேவதையாகவே நடந்து கொண்டார்.

இனப்பிரச்சினையை தீர்க்க முனையும் தலைவர்களுக்கு முதலில், தற்துணிவு அவசியம். அடுத்து கட்சிக்குள், பாராளுமன்றத்துக்குள், போதிய பலம் வேண்டும்.

அதற்கு அப்பால், நாட்டு மக்களிடம் செல்வாக்கும் தேவை.

தற்துணிவு இல்லாத தலைமைகள், ஒருபோதும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆக்கபூர்வமான திட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. நியாயமான அதிகாரப் பகிர்வுக்கு இணங்க முடியாது.

ஏனென்றால் அவ்வாறு இணங்கும் தலைவர்கள் அடுத்த தேர்தலில் சிங்கள மக்களால் தோற்கடிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

அந்தளவுக்கு தமிழர் விரோத மனப்பாங்கும், இனவாதமும், சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருக்கிறது. எனவே, தாம் தோற்கடிக்கப்பட்டாலும் சரி என்ற தற்துணிவுடன் செயற்படக் கூடிய தலைமை ஒன்றே முக்கியம்.

அத்தகைய துணிச்சல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கிறதா என்பது, அவர் கூறுகின்ற படி, தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பாரா என்பதைப் பொறுத்தே உறுதி செய்து கொள்ள முடியும்.

என்னதான் அவர், தீர்வை முன்வைத்து தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டாலும், அவரை ஆட்சி பீடம் ஏற்றிய பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதம் இல்லாமல், ஒரு அங்குலம் கூட அதனை நகர்த்த முடியாது.

பாராளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டுள்ள – பின்தகவால், அரசாங்கத்தை இயங்கிக் கொண்டிருக்கின்ற பொதுஜன பெரமுன, தங்கள் அணியைச் சாராத ஒரு தலைவர், இந்தப் பிரச்சினையை தீர்ப்பதை விரும்புமா?

அடுத்து, இவ்வாறான சூழலைப் பயன்படுத்தி மீண்டும் இனவாத அரசியலை முன்னெடுத்து முன்னரை விடப் பலம் பெறுவதற்கு முனையுமா என இரண்டு முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஒரு தீர்வை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் கூட, அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை தான் தீர்க்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர் என்று ஏபிசிக்கு அளித்த செவ்வியில் ஜனாதிபதி ரணில் கூறியிருந்தார்.

அதற்கான தகுதியும், தராதரமும் தனக்கு இருப்பதாக அவர் நம்புகிறார்.

அதனை மட்டும் வைத்துக் கொண்டு இனப்பிரச்சினையைத் தீர்த்து விட முடியாது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிங்கள மக்களின் ஆணையைப் பெற்று விட முடியாது.

இனப்பிரச்சினைத் தீர்வு என்பது, சிங்கள மக்களின் மனங்களில் இருந்து வர வேண்டும். தமிழ்மக்களின் மனங்களை திருப்திப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இந்த இரண்டும் இல்லாத ஒரு தீர்வு என்றைக்கும் நிலையானதாக இருக்கப் போவதில்லை.

துருவநிலைப்படுத்தப்பட்டு விட்ட இரண்டு இனங்களையும், மீண்டும் ஒரே கோட்டுக்குள் வருவதானால், நியாயமான, நீதியான, ஆக்கபூர்வமான அதிகாரப் பகிர்வு முக்கியம்.

அதற்கு எல்லாக் காரணிகளும் ஒத்துழைக்க வேண்டும்.  அது இல்லாமல் வெறும் பேச்சுக்காக, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக கூறுவது வேடிக்கை.

இன்னும் சில மாதங்களுக்குள் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி கூறியிருப்பது அதைவிட வேடிக்கை.

இன்னமும், பேச்சுக்களும் தொடங்கவில்லை, யாருடன் பேசுவதென்றும் முடிவாகவில்லை.

இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க மந்திரத்தினால் தீர்வைக் கொண்டு வரப் போகிறாரா?

சத்ரியன்