பஞ்சாப்பில் மனைவியுடன் தனிமையில் இருக்க நன்னடத்தை கைதிகளுக்கு அனுமதி

84 0

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த்மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜெயில்களில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது.

வருகிற 27-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக பஞ்சாப்பின் நபா நகரில் உள்ள கோயிந்த்வால் மத்திய சிறை மற்றும் பத்திண்டா நகரில் உள்ள பெண்கள் ஜெயிலில் இந்த நடைமுறையை அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெயிலில் நீண்ட காலமாக உள்ள நன்னடத்தை கொண்ட கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. கொடூர குற்றவாளிகள், ரவுடிகள், ஆபத்தான கைதிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு இந்த சலுகை கிடையாது.

இதுதொடர்பாக ஜெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஜெயிலில் இந்த சலுகையை பெறும் கைதி தனது கணவருடனோ அல்லது மனைவியுடனோ ஜெயில் வளாகத்தில் குளியலறையுடன் கூடிய தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க அனுமதி அளிக்கப்படும். இதன்மூலம் அவர்களின் திருமண பந்தமும், அவர்களிடையே பிணைப்பும் அதிகரிக்கும். கைதிகளிடம் ஒழுக்கமும், நன்னடத்தையும் கூடும்.

இந்த அனுமதி 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். எச்.ஐ.வி. மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவச்சான்றுடன் வரும் மனைவி அல்லது கணவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த சலுகை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பஞ்சாப் மாநிலத்தில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத் தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.