காத்தான்குடியில் உணவகங்களில் திடீர் சோதனை

14 0

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகளின் உணவு தயாரிக்கும் இடங்களில் நேற்று (22) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகளின் உணவு தயாரிக்கும் இடங்களில் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு இவைகளை சீர் செய்வதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டது,

பேக்கரி உள்ளிட்ட மூன்று உணவகங்களுக்கு இதன்போது சீல் வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் என 60 உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி நகரில் காணப்பட்ட 69 உணவு நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இதில் 41 வர்த்தக நிலையங்களில் இருந்து 73 வகையான பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் 23 வகையான பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் ஏனையவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக கொழும்பிலுள்ள மருத்துவ ஆய்வு மையத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.