வருமான வரியை அதிகரிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்!

63 0

ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசுவதென்பது ஒரு கண் துடைப்பாகவே இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (21.09.2022) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “அநேகமாக வருமானத்தை அதிகரிக்கின்ற விடயங்கள் வரிகளை உயர்த்துவது சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். வரிகளை உயர்த்துகின்ற போது சாதாரண ஏழை மக்கள் பாதிக்கப்படாத வகையில் இருக்க வேண்டும்.

அநேகமாக மறைமுக வரிகள் என்று சொல்லப்படக்கூடிய வற் (Vat) வரிகள் போன்றவை நேரடியாக மக்களின் அன்றாட தேவைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் ஒரு வேளை உணவிற்கு கஷ்டப்படுகின்ற போது விலைகளை உயர்த்தும் வகையில் இந்த வரிகளை உயர்த்த கூடாது.

வருமான வரிகளை உயர்த்துவதற்கான முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். அது சம்பந்தமாக மகிந்தானந்த மிக தெளிவாக பல விடயங்களை கூறியிருந்தார். அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வருமானத்தை கூட்டுகின்ற அதே நேரத்தில் இலஞ்ச ஊழல் என்பது இன்று மிகவும் பெரும்பான்மையாக நடைபெறுகின்ற ஒரு விடயம். தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் நிச்சயமாக இந்த குற்றங்களை தடுக்க முடியும்.

நாங்கள் ஏற்கனவே வங்குரோத்து நாடாக உலக நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் இது இன்னும் கடுமையான நிலைமையை உருவாக்கும்.

ஒரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு முன்வைக்காவிட்டால் இந்த பொருளாதார வளர்ச்சியை பற்றி பேசுவதென்பது ஒரு கண் துடைப்பாகவே இருக்கும். தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் என அனைவருமாக சேர்ந்து பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்த நாட்டை ஒரு சுபீட்சத்தை நோக்கி கொண்டுபோக முடியும். ஆகக்குறைந்தது இந்த வங்குரோத்து நிலையிலிருந்தாவது முதலில் மீட்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.