உக்ரைன் போரால் நாட்டை விட்டு வெளியேறிய 1.4 கோடி பேர்: ஐநா கவலை

16 0

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக உக்ரைனில் ஒரு கோடியே 40 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸ் நிகழ்த்திய உரை விவரம்:

உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிடுவதாக தெரியவில்லை. இந்த போர் காரணமாக கடந்த 7 மாதங்களாக சொல்லொண்ணா துயரங்களையும் பேரழிவுகளையும் உக்ரைன் மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த போரின் தற்போதைய நிலை அபாயகராமானதாகவும், மனதை உலுக்குவதாகவும் உள்ளது.

இந்த அர்த்தமற்ற போர், உக்ரைனுக்கும் உலகத்திற்கும் யூகிக்க முடியாத பயங்கரமான தீங்குகளை விளைவிக்கக்கூடியது. அணுஆயுத போர் குறித்து யோசிக்காத நிலையில் இருந்த உலகம் தற்போது அதுபற்றி விவாதிக்கிறது.

உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் தற்போது இல்லாத பகுதிகளில் மக்கள் எந்த பக்கம் இணைய விரும்புகிறார்கள் என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையை அளித்துள்ளன. ஒரு நாட்டின் பகுதியை வேறொரு நாடு அச்சுறுத்தல் மூலமாகவோ அல்லது படைகளின் மூலமாகவோ இணைத்துக்கொள்ள முயல்வது ஐ.நா சாசனத்திற்கு எதிரானது.

உக்ரைனில் நிகழ்ந்து வரும் போரால் நாள்தோறும் தோராயமாக 5 குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள் அல்லது காயமடைகிறார்கள். உக்ரைனில் ஏறக்குறைய அனைத்துக் குழந்தைகளும் போர் குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். வன்முறையாலும், குடும்பங்கள் பிரிவதாலும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை உக்ரைனில் இருந்து 1.4 கோடி மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான்.

கொரோனா பெருந்தொற்று காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் ஏற்கனவே பாதிக்கப்பட்டு வரும் ஏராளமான வளரும் நாடுகள், இந்த போர் காரணமாக மேலும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பெண்களும் குழந்தைகளுமே இருக்கிறார்கள்.

இந்த போரால் ஏற்பட்டு வரும் சகிக்க முடியாத மனித உரிமை மீறல்கள் குறித்து அதிர்ச்சி தரும் ஆவணங்களை ஐ.நா மனித உரிமை ஆணையம் ஆவணப்படுத்தி உள்ளது. மரண தண்டனைகள், பாலியல் வன்கொடுமைகள், பொதுமக்களுக்கு எதிராகவும், போர் கைதிகளுக்கு எதிராகவும் நடைபெற்ற மனித தன்மையற்ற தாக்குதல்கள் என அந்த ஆவணங்கள் கொடூரத்தின் உச்சமாக உள்ளன. இசியம் எனும் இடத்தில் புதைக்கப்பட்ட உடல்கள் குறித்த சமீபத்திய தகவல்கள் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதுபோன்ற அனைத்து குற்றங்களும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நேர்மையான மற்றும் சுதந்திரமான நீதி விசாரணையின் கீழ் ஊடுருவல்காரர்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச குற்றங்களுக்கு தண்டனை இருக்காது என்ற நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். இந்த அனைத்து குற்றங்கள் குறித்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

போர் களத்திற்கு மத்தியில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் நிலை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி, அந்த அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை சர்வதேச அணுஆயுத முகமை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.