வெஸ்மினிஷ்டர் முறைமையிலான பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுபவர்களை மூன்று தலையுடைய கழுதைகள் என கொல்வின் ஆர்.டி சில்வா குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை. சுயாதீனமாக செயற்படுபவர்களின் பேச்சுரிமையை முடக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
யார் கழுதை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்பதை ஆளும் தரப்பின் பிரதான கொறடா தெரிந்துக்கொள்ள வேண்டும் என சுயாதீன உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் வரபிரசாத பிரச்சினை முன்வைத்தமை தொடர்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
225 உறுப்பினர்களுக்கும் பேச்சுரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் முன்வைத்த வரபிரசாத பிரச்சினை தொடர்பில் ஆளும் தரப்பு என்ற ரீதியில் எமது நிலைப்பாட்டை குறிப்பிட வேண்டும். எமது பாராளுமன்றம் வெஸ்மினிஷ்டர் முறைமையிலானது.
பாராளுமன்றில் ஆளும் மற்றும் எதிர் தரப்பு என்ற இரு பிரிவுகள் மாத்திரமே இருக்க வேண்டும் இடையில் சுயாதீன தரப்பு என்பதொன்று இருக்க முடியாது. ஆளும் அல்லது எதிர்தரப்பினர் இல்லாத தரப்பினருக்கு சபை நடுவில் ஆசனம் ஒதுக்கிக்கொடுக்க வேண்டும்.
பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவர்களை மூன்று தலையுடைய கழுதை’ என கொல்வின் ஆர்.டி .சில்வா குறிப்பிட்டார். நாங்கள் அவ்வாறு குறிப்பிடவில்லை. அவர்களுக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.
2015ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஊடாக பாராளுமன்றுக்கு தெரிவான போது எதிர்க்கட்சி பக்கம் அமர வேண்டும் என்பதை கட்சி என்ற ரீதியில் தீர்மானித்தோம். அதற்கமைய எமக்கு கருத்து தெரிவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
பாராளுமன்ற விவாதத்தின் போது எதிர்தரப்பினருக்கும், சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கும் 70 சதவீதமளவில் நேரம் ஒதுக்கி கொடுக்கப்படுகிறது.
இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் சந்திம வீரகொடி பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவது இதொன்றும் புதிதல்ல.
சுயாதீனமாக செயற்பட்ட தரப்பினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவ்வாறில்லை. சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுக்கான வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கழுதை கதை குறிப்பிடப்பட்டது. யார் கழுதை என்பதை என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்பதை ஆளும் தரப்பின் பிரதான கொறடா தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றார். இதன்போது மீண்டும் கருத்துரைத்த பிரசன்ன ரணதுங்க நான் கழுதை என்று வரையும் குறிப்பிடவில்லை. கொல்வின் ஆர். டி சில்வா குறிப்பிட்டதையே குறிப்பிட்டேன் என்றார்.

