மழையால் கொத்தமல்லி மகசூல் பாதிப்பு: ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனை

18 0

தொடர்ந்து பெய்த மழையால், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன் கனிக்கோட்டை பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரங்களில் அதிகளவில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லி சமையலில் அதிக அளவில் பயன் படுத்தப்படுவதால், சந்தையில் தினசரி வரவேற்பும், விற்பனையும் இருக்கும். இதனால், விவசாயிகளுக்கு விற்பனை சந்தை வாய்ப்பு எப்போதும் இருக்கும் என்பதால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கொத்தமல்லி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூளகிரி பகுதியில் சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி, சூளகிரி சந்தைக்கு விற்பனை கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கு தினமும் டன் கணக்கில் விற்பனைக்கு செல்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் கனமழையால் கொத்தமல்லி தோட்டங் களில் தண்ணீர் தேங்கி, மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால்,சந்தைக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொத்தமல்லி தழை ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனையானது. இதனால், விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்ததால், சாகு படி பரப்பளவு குறைந்தது. மேலும், சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த தொடர் கனமழையால் கொத்தமல்லி தோட்டங்களில் தண்ணீர் தேங்கி செடிகள் அழுகி மகசூல் பாதிக்கப்பட்டது.

இதனால், தினமும் வெளியூர்களுக்கு 50 டன் வரை விற்பனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 10 டன்னுக்குள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. மேலும், சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.