மகாராணியை விமர்சிப்பவர்கள் பிரதிநிதிகளை மறந்து விடுகின்றனர்!

225 0

ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய மகாராணியாக 70 வருடங்கள் கோலோச்சிய இரண்டாம் எலிசெபத் மகாராணியார் கடந்த 8 ஆம் திகதி தனது 96 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு உலகெங்கினும் பல வேறுபட்ட பிரதிபலிப்புகளை எழுப்பத் தவறவில்லை. ஏனெனில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பிரித்தானியாவின் மகாராணியாக அவர் விளங்கினார்.

பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் இருந்த பெரும்பாலான நாடுகள் இரண்டாம் உலக மகா  யுத்தத்துக்குப்பிறகு சுதந்திரம் பெற்றன. பிரித்தானிய சாம்ராஜயமானது ஒரு சில தீவுகளைக்கொண்ட ஐக்கிய இராச்சியமாக சுருங்கிய பிறகே இரண்டாம் எலிசெபத் மகாராணியார் அரியணை ஏறினார். ஆகவே அவரை பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மகாராணி என்று அழைப்பது பொருத்தமாக இராது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து.

எனினும் அவர்  இறக்கும் போது 56 பொதுநலவாய நாடுகளின் தலைவராகவும் 14 நாடுகளின் மகாராணியாகவுமே உயிர் நீத்தார். அவர் அரியணை ஏறுவதற்கு முன்பு, அவரது தந்தையாரான ௬ ஆம் ஜோர்ஜ்  மன்னர் மற்றும் அவரது மூதாதையர்களால் உலகின் பெரும்பான்மையான நாடுகள், தீவுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ஆனால் 1952 ஆம் ஆண்டு இவர் அரியணை ஏறிய பின்னர், எந்த நாட்டையும் இவர் ஆக்கிரமிக்கவில்லை. மாறாக தனது மூதாதையர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கினார். மிகவும் மென்போக்கு கொண்ட இவர் உலக நாடுகளின் தலைவர்களாலும் அந்நாட்டு மக்களாலும் பெரும் மரியாதைக்குரிய ஒருவராக மதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது மரணத்துக்குப்பின்னர் பிரித்தானி காலனித்துவ ஆட்சியின் கொடூரங்கள்   அடிமை முறை,   சொத்து சூறையாடல்கள் பற்றி பலரும் பிரஸ்தாபித்திருந்தார்கள். இதற்கும் காலஞ்சென்ற மகாராணிக்கும் என்ன தொடர்புகள் இருந்தன என்பது அவர்களுக்கே வெளிச்சம். அதை விட பிரித்தானியாவின்  கிழக்கிந்திய கம்பனியின் கீழ் இருந்த இலங்கைக்கு பிரித்தானியர்களால் அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளி உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமைகளை சுட்டிக்காட்டியும் சிலர் சமூக ஊடகங்களில் காரசாரமான கருத்துக்களை வெளிப்படுத்த தவறவில்லை.

கடந்த 200 வருடங்களாக இன்னும் உழைக்கும் வர்க்கமாகவே இருக்கும் தோட்டத்தொழிலாளர்களின் இந்த நிலைமைக்கும் காலஞ்சென்ற மகாராணியாரே காரணம் என பலர் அறியாத்தனமாக கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். தென்னிந்திய கிராமங்களிலிருந்து பிரித்தானியரால் இலங்கைக்கு முதலாவது உழைக்கும் வர்க்கத்தினர்  அழைத்து வரப்பட்ட ஆண்டு 1823 ஆகும். அப்போது பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்தவர் 4 ஆம் ஜோர்ஜ் மன்னர். அவருக்குப்பிறகு ஐந்து பேர் பிரித்தானிய சாம்ராஜயத்தின் அரியணையை அலங்கரித்த பிறகே இரண்டாவது எலிசெபத் மாகாராணியார் ஆட்சியில் அமர்ந்தார். அச்சந்தர்ப்பத்தில் இந்திய வம்சாவளி மக்கள் குடியுரிமையை இழந்து நாடற்றவர்களாக இருந்த காலகட்டமாகும். அதற்குக் காரணம்   மகாராணி இல்லை.  இலங்கையின் முதலாவது பிரதமராக விளங்கிய டி.எஸ்.சேனாநாயக்க. இலங்கையானது 1972 ஆம் ஆண்டு குடியரசானது. 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது முதலாவது பிரதிநிதியை பாராளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர். இப்போது வரை அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆகவே கடந்த 45 வருடங்களாக இந்த மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் பிரதிநிதிகள் தமது சமூகத்துக்கு என்ன செய்தார்கள் என்ற கேள்வியை மறந்து, மகாராணியை ஏசிக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக அந்த பணியை இந்த மக்கள் செய்யத்தவறுவதில்லை. இந்த மக்கள் பிரதிநிதிகள் ஆதவு  நல்கி அரசாங்கத்தை அமைக்கும் நாட்டின் ஜனாதிபதிகள், இந்த சமூகத்துக்கு என்னென்ன விடயங்களை செய்திருக்கின்றார்கள் என மக்கள் சிந்திப்பதில்லை. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த காலனித்துவ நாடுகளில்,  தென்னிந்திய கிராமங்களிலிருந்து மக்கள் இலங்கைக்கு மாத்திரம் வரவில்லை. மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, பிஜி தீவுகள்,மலேசியா, மொரிஷியஸ் என இந்த பட்டியல் நீள்கின்றது. அங்கு சென்ற மக்கள் இன்று பிரச்சினைகள் இல்லாது வாழ்வதற்குக் காரணம் அந்த நாடுகள் தன்னிறைவு பொருளாதாரத்தை கொண்டிருக்கின்றன. அந்த பொருளாதாரத்துக்கு இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த மக்களும் ஆதரவு நல்கியுள்ளனர்.

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் 150 வருடங்களாக பங்களிப்புச் செய்து வருவது தேயிலைதுறை. அப்படியானால் அந்த தொழிற்றுறையோடு பின்னிப் பிணைந்துள்ள தோட்டத்தொழிலாளர்கள் ஏன் இன்னும் சம்பளத்துக்காக போராட வேண்டும்? இதற்கு யார் காரணம்? எலிசெபத் மகாராணியா? மக்கள் பிரதிநிதிகளா அல்லது அந்தப் பிரதிநிதிகள் காலா காலமாக முட்டுக்கொடுத்து வரும் சிங்கள கட்சித் தலைமைத்துவங்களா?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.  எதற்கெடுத்தாலும் பிரித்தானிய சாம்ராஜயத்தை சுட்டிக்காட்டுவோர், சுதந்திரத்துக்குப்பிறகு எமது நாட்டில் என்ன நடந்தது என்ற வரலாற்றை அறிய வேண்டும். அதன் பிறகு யாரிடம் கேள்விகளை தொடுக்க வேண்டும் என்ற சிந்தனைப் பிறக்கும். அநேகமாக அடுத்து வரும் தேர்தல் கூட்டங்களில்,  தைரியமிருப்போர் அல்லது தமது சமூகம் குறித்து கேள்வி எழுப்ப உரிமை உள்ளது என்று நினைப்போர் கேள்விகளை எழுப்பலாம். இங்கு நவீன காலனித்துவம் இன்னும் அமுலில் உள்ளது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளும் காலம் என்று வரப்போகின்றது என்று தெரியவில்லை.

சிவலிங்கம் சிவகுமாரன்