ரத்ன தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விவகாரம்…

182 0

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், தனக்கு கட்சியின் தலைவர் சமன் பெரேரா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவான வழக்கில், நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் ஒன்றினை வழங்க  அபே ஜன பல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தயாராகி வருகின்றார்.

இது தொடர்பில் நேற்று (20) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் சமன் பெரேரா, குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாயத்தின் கீழ்  இரகசிய வாக்கு மூலம் வழங்க, தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை முன் வைத்தார்.

எனினும் சமன் பெரேரா குறித்த விவகாரத்தில் பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளாரா என உறுதியாக  வெளிப்படுத்தப்பட்டிராத நிலையில் நேற்றைய தினம் முன் வைத்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.

எனினும் சமன் பெரேரா குறித்த விவகாரத்தில் சந்தேக நபரா என்பதை உறுதி செய்ய,விசாரணையாளர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக  நீதிவான்  ரஜீந்ரா ஜயசூரிய அறிவித்தல் பிறப்பித்ததுடன் அன்றைய தினம் மன்றில் ஆஜராக சமன் பெரேராவுக்கும் அறிவித்தல் விடுத்தார்.

நேற்றைய தினம், சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் உள்ளிட்டோருடன் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம், விஷேட கோரிக்கையை முன் வைத்து, வழக்கின் சந்தேக நபர் என வழக்கு ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தனது சேவை பெறுநர் சமன் பெரேராவுக்கு குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாயத்தின் கீழ் இரகசிய வாக்கு மூலம் வழங்க வேண்டியிருப்பதாக அறிவித்தார்.

எனினும் இதன்போது மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, சமன் பெரேரா இதுவரை பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை என திறந்த மன்றில் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான நிலையில் அவரிடம் குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாயத்தின் கீழ்  வாக்கு மூலம் பெற்றுக்கொள்வது பொருத்தமானதாக அமையாது என நீதிவான் குறிப்பிட்டார்.

குறித்த வழக்கு, விசாரணை மட்டத்தில் உள்ள நிலையில், விசாரணைக்கு உதவி செய்ய, குறித்த நபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்கு மூலம் வழங்க முடியும் எனவும் நீதிவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனினும் குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயம் பிரகாரம் தனது சேவை பெறுநருக்கு வாக்கு மூலம் வழங்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் வாதிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே, சமன் பெரேரா குறித்த வழக்கில் இதுவரை சந்தேக நபராக பெயரிடப்படவில்லை எனவும், அவர் வழக்கின் ஒரு தரப்பாக இல்லாமையால் அவர் சார்பிலான கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிவான் அறிவித்தார்.