பஷில், கோட்டா, கப்ரால் ஆகியோரே பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும்

226 0

பொருளாதாரத்தை படுகொலை செய்தவர்கள் அரச வருமானத்தை அதிகரிக்க அவதானம் செலுத்துகின்றனமை நகைப்புக்குரியது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் அரசாங்கம் ஊழல் மோசடியை குறைத்துக் கொள்ளவில்லை. பஷில், கோட்டா, கப்ரால் ஆகியோரே பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றில் 21 ஆம் திகதி புதன்கிழமை அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்வது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சமர்ப்பித்துள்ள பிரேரணை வரவேற்கத்தக்கதாக உள்ளதுடன்,நகைப்பாகவும் உள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த இவர் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை விமர்சித்ததால் இன்று அமைச்சு பதவி இல்லாமல் தனித்துள்ளார்.

விவசாயத்துறை அமைச்சராக தோல்வி அடைந்த இவர் அரச வருமான அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கிறார்.

நாட்டு மக்கள் உணவு பற்றாக்குறைறை எதிர்க்கொண்டுள்ளமைக்கு இவர் பொறுப்புக் கூற வேண்டும்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததன் வரி குறைப்பு செய்தால் அரச வருமானம் முதலாவதாக வீழ்ச்சியடைந்தது. இவர்கள்  வீரர் என தோளில் சுமந்துக் கொண்டு வந்த முட்டாள்தனமான நபரினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இழந்த அரச வருமானத்தை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் கண்மூடித்தனமாக நாணயத்தை அச்சிட்டதால் பணவீக்கம் அதிகரித்தது இதனால் இன்று அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளன.

பொருளாதார நெருக்கடி தீவிரமைடைந்துள்ள நிலையிலும் அரசாங்கத்தின் ஊழல் மோசடி குறைவடையவில்லை.பல்வேறு வழிமுறைகளில் அரச நிதி மோசடி செய்யப்படுகிறது.மோசடிகளை தடுப்பதற்காகவே கோப் குழுவை நியமியுங்கள் என வலியுறுத்துகிறோம்.

நாட்டில் அரச வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்.

ஏழு மூளை உடையவர் என வர்ணிக்கப்பட்ட கபுடாஸ், தன்னிச்சையான கொள்கையுடைய ஜனாதிபதி,மற்றும் பொருளாதார படுகொலைளாளி கப்ரால் ஆகிய மூவருமே பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும்.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த அரசாங்கம் சிறந்த கொள்கை திட்டங்களை செயற்படுத்த வேண்டும். வனவளத்துறையுடன் தொடர்புடைய சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.