ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராகும் தீபா

399 0

பெரும்பாலன அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது அரசியல் பயணத்தை கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கினார்.

புதிய கட்சி தொடங்குவதா? அல்லது அ.தி.மு.க.வில் சேருவதா? என்பதை வருகிற 24-ந்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அறிவிக்கப் போவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தீபா இது தொடர்பாக தனது வீட்டில் குவியும் தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறார். அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றலாமா? அல்லது தனிக்கட்சி தொடங்கலாமா? என்று அவர் கருத்து கேட்டார்.

அப்போது 80 சதவீத ஆதரவாளர்கள் அ.தி.மு.க. வில் சேர்ந்து ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

20 சதவீதம் பேர் மட்டுமே அ.தி.மு.க.வில் இணைந்தால் உங்கள் தனித்தன்மை போய் விடும். எனவே புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

80 சதவீத தொண்டர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தீபா அ.தி.மு.க. வில் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றலாம் என்று முடிவு செய்திருந்தார்.

இன்று சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பிறகு அதற்கான முடிவை எடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். இதனால் தீபா வீட்டில் இன்று ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.

இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் தீபா வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்போது தீபா பால்கனிக்கு வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் சென்றார்.

இந்த நிலையில் இன்று மாலையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தீபா திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அப்போது அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.