ராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி: சர்ச்சையில் சிக்கிய ஜஸ்டீன் ட்ரூடோ

133 0

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் உடல் நலக்குறைவால் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரின் இறுதி சடங்கு லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவும் ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இந்த நிலையில் ராணியின் இறுதி சடங்குக்கு முன்பாக ஜஸ்டீன் ட்ரூடோ லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பியானே வாசித்தபடி மகிழ்ச்சியாக பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனால் ஜஸ்டீன் ட்ரூடோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார். கனடா நாட்டினர் பலரும் சமூக வலைத்தளங்களில் ஜஸ்டீன் ட்ரூடோவை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் “ராணியின் மறைவுக்கான துக்கத்தில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டது அவமானம்” என குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் இது ஒரு சாதாரண விஷயம் என்றும் வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டதாகவும் சிலர் ஜஸ்டீன் ட்ரூடோவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.