சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக கூவத்தூரில் இருக்கும் 125 எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா ஆலோசனை நடத்துகிறார்.
சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆட்சியமைக்கும் முயற்சியாக, ஆதரவு கடிதம் கொடுத்திருந்த எம்.எல்.ஏ.க்களுடன் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த சசிகலா, இந்த தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நேற்று இரவே, இப்படியொரு சூழல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். அதன்படி கட்சியின் மூத்த உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. குறிப்பாக கட்சியின் சார்பில் செங்கோட்டையன் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்றும் பேசப்பட்டது.
கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார்.
கூவத்தூரில் உள்ள 125 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும், அவர்களில் ஒருவரை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்ய உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

