தோட்டப்புறங்களில் இதுவரை 4258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

148 0

தோட்டப்புறங்களில் வாழும் குடும்பங்களுக்கு இந்திய உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 4,258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்திருக்கின்றன. இன்னும் 1,461 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன என நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹின் குமாரி விஜேரத்னவினால் கேட்கப்பட்டடிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்திய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தோட்டப்புறங்களில் வாழும் குடும்பங்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கை செயற்பட்டு வருகின்றது. அதன் பிரகாரம் அமைச்சின் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2015இல் இருந்துவரை பெருந்தோட்ட குடும்பங்களுக்கு 4,258 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்திருக்கின்றன. அதேநேரம் 1,461 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய உதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வீடமைப்பு வேலைத்திட்டம் இரண்டு கட்டங்களாக இடம்பெறுகின்றது.  அதன் முதற்கட்டத்தின் கீழ் 3,799 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதுடன் 201 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இந்தி உதவித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீடமைப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் தோட்டப்புற மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்க பிரேரிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

இதன்போதுமேலதிக கேள்வியொன்றை முன்வைத்து ரோஹினி குமாரி எம்.பி. குறிப்பிடுகையில், தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்களுக்கு எமது அரசாங்கத்தில் 7 பேர்ச் காணி பொருத்தமான இடங்களில் பெற்றுக்கொடுத்திருந்தோம்.

ஆனால் தற்போது அந்த காணி உரிமை பத்திரங்களை மீள பெற்றுக்கொண்டு புதிதாக காணிப்பத்திரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த மக்களுக்கு வாழ்வதற்கு பொருத்தமில்லாத இடங்களிலேயே 7 பேர்ச் காணி வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் 200 வருடங்களுக்கும் அதிக காலம் அந்த மக்கள் லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இது அவர்களின் மனித உரிமை மீறும் செயலாகும். தோட்டப்புற மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் காணிகளில் நாட்டின் தற்போதைய நிலைமையில் வீடுகளை கட்டிக்கொடுப்பது சாத்தியமான விடயமல்ல.

அதனால் அவர்களில் வசதி இருப்பவரகளுக்கு அவர்களுக்கு முடியுமான வகையில் வீடொன்றை நிர்மாணித்துக்கொள்ள காணி உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு முடியுமா என கேட்கின்றேன். அத்துடன் லயன் அறைகளில் வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கும் தோட்டங்களில் பயன்படுத்தாத காணிகளை அவர்களுக்கும் பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், தோட்டப்புறங்களில் வீடு தேவையுடையவர்களின் பெயர் விபரங்களை தோட்ட நிர்வாகமே வழங்குகின்றது. அவ்வாறு வழங்கப்படும் குடும்பங்களுக்கு இந்திய உதவியுடன் வீடமைப்பு அமைச்சின் ஒதுக்கீட்டுடனே வீடு நிர்மாணிக்கப்படுகின்றது. அத்துடன் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தோட்ட மக்களின் வீடமைப்பு திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.