சிறுமி பாலியல் வன்கொடுமை- இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேருக்கு 26-ந்தேதி தண்டனை விவரம் அறிவிப்பு

84 0

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது உறவினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர்கள், சிறுமியை சீரழித்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு, இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்பட 21 பேரும் குற்றவாளிகள் என கடந்த 15-ந் தேதி அறிவித்தது. மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் 19-ந் தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் பட்டியலிடப்பட்டது. இதற்காக இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேரும் சிறையில் இருந்து போலீஸ் வேன் மூலம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். ஆனால் நீதிபதி எம்.ராஜலட்சுமி திடீரென விடுப்பு எடுத்ததன் காரணமாக நேற்று அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 21 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.