மெய்வல்லுனர் போட்டி 2022 – தமிழாலயம் பென்ஸ்கைம்

1204 0

தமிழாலய மாணவர்களின் உடலுள வளத்தையும், ஒற்றுமை, புரிந்துணர்வு, என்பவற்றையும் வளர்த்தெடுக்கும் நோக்கோடு, தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பென்ஸ்கைம் தமிழாலயம் அயற் தமிழாயங்களின் பங்களிப்போடு மெய்வல்லுனர் போட்டியை ஆண்டுதோறும் நடாத்திவருகிறது. இந்த ஆண்டுக்கான மெய்வல்லுனர் போட்டி 17.09.2022 அன்று பென்ஸ்கைம் வைகெற்கவுஸ் விளையாட்டரங்கில்; சிறப்பாக நடைபெற்றது.

மண்ணின் மைந்தர்களின் நினைவைச் சுமந்தவாறு பொதுச்சுடர் ஏற்றப்பட்டபின், யேர்மன் தேசியக்கொடி மற்றும் தமிழீழ தேசியக் கொடியோடு பென்ஸ்கைம் தமிழாலயக் கொடியேற்றப்பட்டது. தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர்ந்து, அவரது திருவுருவப்படத்திற்கு நினைவுச் சுடர் ஏற்றியதையடுத்து, அகவணக்கம் இடம்பெற்றது. விளையாட்டுப் போட்டியிலே கலந்துகொள்ள வருகைதந்திருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மலர்வணக்கம் செய்ததைத் தொடர்ந்து போட்டி தொடங்கியது.

மப்பும் மந்தாரமும் மழையும் கலந்த காலநிலையானபோதும் விண்ணப்பித்த 117 போட்டியாளர்களில் 98 போட்டியாளர் பங்குபற்றினர். போட்டியிலே அயற் தமிழாலயங்களின் மாணவர்களோடு பெற்றோர்களும் இணைந்து சிறப்பித்தனர். அதேவேளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கெசன் மாநிலப் பொறுப்பாளர், பென்ஸ்கைம் – பூய்ஸ்ரட் கோட்டங்களின் பொறுப்பாளர், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டளர், கலைப் பிரிவுப் பொறுப்பாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

போட்டியின் நிறைவாக வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் நடைபெற்றதைத் தொடர்ந்து தேசியக் கொடி கையேற்பயடுத்து தாயக விடியலுக்கான நம்பிக்கைப் பாடலோடு சிறப்பாக நிறைவுற்றது.