மாநகர சபை உறுப்பினர்புவனேஸ்வரிக்கு அஞ்சலி

121 0
காலஞ்சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் பூதவுடல், கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் இறுதி அஞ்சலிக்காக இன்று (18) காலை 09 மணி தொடக்கம் 10 மணி வரை மாநகர சபையின் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்முனை மாநகர சபை மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரங்கல் கடிதம் சபையில் வாசிக்கப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கலந்துகொண்ட ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களால் கையளிக்கப்பட்டது.

அத்துடன், மாநகர மேயர், உறுப்பினர்கள் சிலரால் இரங்கல் உரைகளும், இரங்கல் கவிதையும் வாசிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், பிரதேச முக்கிய பிரமுகர்கள், ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் யூ.எல். ஆதம்லெப்பை மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கல்முனை மாநகர சபையில் 2018ஆம் ஆண்டு தொடக்கம் உறுப்பினராக பதவி வகித்து வந்த புவனேஸ்வரி விநாயகமூர்த்தி, திடீர் சுகயீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (15) இரவு தனது 53ஆவது வயதில் காலமானார்.