அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

107 0

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

தமிழக மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 2006-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துகளையும், அவரது குடும்பத்தினரின் சொத்துகளையும் கடந்த பிப்ரவரியில் முடக்கியது.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது, 160 ஏக்கர் நிலம் உட்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18 சொத்துகளை மீண்டும் முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.