உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் – எம்.எல்.ஏ.க்களிடையே சசிகலா சூளுரை

273 0

சோதனையான காலத்தில் ஜெயலாலிதாவுடன் உறுதியாக நின்றேன். இப்போது என்னையும் ஒ.பன்னீர்செல்வத்தையும்  ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிரிகள் வலை பின்னுகிறார்கள்.

தலைவரும், அம்மாவும் நமக்கு துணையாக இருக்கிறார்கள். அதனால், அ.தி.மு.க. அரசாங்கத்தை யாரும் எந்த நேரத்திலும் தடை போட்டு நிறுத்தி வைக்க முடியாது. நம்முடைய எம்.எல்.ஏ.க்கள் ஒரு கடல். இதை யாராலும் தடுப்பணை போட்டு தடுக்க முடியாது.

இந்த கட்சியையும், ஆட்சியையும் எந்த வித முயற்சி செய்தாலும் அதில் பலன் ஒன்றும் இல்லை. அவர்கள் நிச்சயம் தோற்றுப்போவார்கள். நாம் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்மிடம் வலை போட முடியவில்லை என்றால் நம் குடும்பத்தினரிடம் வலை போட பார்ப்பார்கள்.

அம்மா கொடுத்த ஆட்சி தமிழக மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி. எனவே, அர்ப்பணிப்பு உணர்வோடு நம் திட்டங்களை நிறைவேற்றி, மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நம்முடைய உழைப்பு இருக்க வேண்டும். நானும் உழைப்பேன், உங்களின் உழைப்பும் தேவை.

இந்த ஆட்சி நம்மிடம் வந்ததும் உங்கள் தொகுதிகளுக்குச் சென்று, இந்த இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? என்பதை எடுத்துச்சொல்லி, மக்களிடம் பழகி, பாராளுமன்றத் தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேணடும். நாம் யார் என்பதை காட்டவேண்டும். கோபம் பெரிதல்ல, செயல்தான் நமக்கு முக்கியம்.

இபபோதும் சொல்கிறேன், இந்த இயக்கத்தையும் சரி, ஆட்சியையும் சரி எந்த கொம்பனாலும் அசைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த இயக்கத்துககு பிரச்சனை என்று வந்தால் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்.

இப்போது பன்னீர்செல்வம் நம் கையாலேயே நம் கண்ணை குத்துகிறார். நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக என்னிடம் இருந்தால், நம் பணியைச் செய்து மேலும்மேலும் அ.தி.மு.க.வை வளர்க்க முடியும். நீங்கள் எனக்கு துணையாக இருந்தால் எவ்வளவு பேர் வந்தாலும் நான் சாதிப்பேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது. அது எப்போதும் விலைபோகாது. யாருக்கும் நான் பயப்படமாட்டேன். நான் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன்.

எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை தெளிவாக எடுப்பேன். கலங்க மாட்டேன். நானும் அம்மாவும் சிறைச் சாலைகளையும் பார்த்திருக்கிறோம், அதிலிருந்து மீண்டு வந்து ஆட்சியையும் பிடித்திருக்கிறோம். பெண்தானே பயமுறுத்திப் பார்க்கலாம் என்றால் முடியாது. அது அம்மாவிடம் எப்படி முடியாதோ, அதேபோல் என்னிடமும் முடியாது எனவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.