நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு இணக்கம் தெரிவிக்காதவர்களை விட , அவற்றுக்கு இணக்கம் தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே எம்முடன் இணைந்து பயணிப்பதற்கு தயாராக உள்ளவர்களுடன் ஒன்றிணைந்து இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று தான் நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் பல சந்தர்ப்பங்களில் கூட்டணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்படும் கூட்டணி அரசாங்களினால் பல்வேறு சவால்கள் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்டுள்ளன. ஏனைய நாடுகளில் இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த சவால்களை எதிர்கொள்வதற்கு அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து பெற்றுக் கொண்ட வெற்றியை மேம்படுத்துவதற்காக தொடர்ந்தும் அந்த ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான சவாலை வெற்றி கொள்வதற்கு தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் , அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பவர்களானாலும் , அங்கத்துவம் வகிக்காதவர்களானாலும் , பாராளுமன்ற உறுப்பினர்களானாலும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.
தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கான துரித தீர்வினை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு இணக்கம் தெரிவிக்காதவர்களை விட , அவற்றுக்கு இணக்கம் தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே அவர்களுடன் இணைந்து எம்மால் இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் என்று நம்புகின்றோம் என்றார்.

