ஜனாதிபதி ரணில் மறைமுகமாக சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கிறார் – செல்வராசா கஜேந்திரன்

120 0

திருக்கோணேச்சரம் ஆலயத்தை பௌத்த மயமாக்கும் தீவிர முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவர்ச்சிகரமான வார்த்தையினை குறிப்பிட்டுக்கொண்டு மறைமுகமாக சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கிறார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரியம் இராணுவத்தினரது ஆதரவுடன் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையின் மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின்  சிம்மாசன உரையினை பலர் கண்மூடித்தனமாக புகழ்வதை  காண முடிகிறது.இது எந்தளவிற்கு முன்னோக்கி செல்லும் என்பதை குறிப்பிட முடியாது.தமிழ் மக்களை பொறுத்தவரை ஜனாதிபதியின் உரை வழமை போன்று ஏமாற்றும் ஒரு நிகழ்ச்சியாகவே காணப்படுகிறது.

74 வருடகாலமாக சிங்கள பேரினவாதிகளினால் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனபடுகொலையில் இருந்து தன்மை பாதுகாத்துக் கொள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்ட,தமிழ் தேசியமும்,அதன் இறைமையும் அங்கிகரிக்கும் வகையில் தமிழ் மற்றும் சிங்கள சமூகமும் அங்கிகரிக்கும் வகையிலான தேசியத்தை உருவாக்கும் வகையில் சமஷ்டியாட்சி  அரசியலமைப்பினை கொண்டு வர வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமஷ்டியாட்சி அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை.மாறாக அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.இதன் மூலம் தான் தொடர்ந்து சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பல்லின சமூகம் வாழ்கின்றார்கள் என்பதை கவர்ச்சிகரமான வார்த்தைகளை சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக குறிப்பிட்டாலும் கூட நடமுறையில் தமிழ்,முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினருக்கு எதிராக இன அழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதை தெளிவாக அறிய முடிகிறது.

உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தின் அங்கமாக உள்ள தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தமிழ் மக்களின் பாரம்பரியங்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தொல்பொருள் திணைக்களத்தினால் தமிழர்களின் வரலாற்று தொண்மைமிக்க திருகோணமலை சிவனாயலத்தை பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கள அரசியல்வாதியினால் பலவந்தமான முறையில் சிங்களவர்கள் திருகோணமலை ஆயலத்தை சூழ்ந்த பகுதியில் கடைகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனது வாக்கு வங்கியினை அதிகரித்துக்கொள்வதற்காக  இனவாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் அந்த அரசியல்வாதி ஆலயத்தை சூழ்ந்த பகுதியில் சிங்களவர்களுக்கு கடைகளை அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்.

தற்காலிகமாக வழங்கப்பட்ட கடை தொகுதியை நிரந்தரமாக வழங்க தொல்பொருள் திணைக்களம் முயற்சிப்பது முற்றிலும் தவறானது.திருகோணேச்சரம் ஆலயத்தை  பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாக முன்னெடுக்கிறார்.

திருகோணமலை மாவட்டத்தில் 64ஆம் கட்டை பகுதியில் இராஜவந்தான் மலை உள்ளது.இந்த மலையில் அகத்தியமா முனிவர் சிவலிங்க வழிபாட்டில் ஈடுப்பட்டுள்ளார்.இந்த சிவலிங்கமும்,வழிபாட்டுத்தலமும் அகற்றப்பட்டுள்ளது.அங்கு பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படுகிறது.கொட்டியாபுரம் என்ற பெயரை திரிபுப்படுத்தி, கொட்டியா ராம விகாரை என்ற பெயரில் இந்த ஆக்கிரமிப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.இதற்கு இராணுவமும்,அரசாங்க அதிபரும் துணை நிற்கிறார்கள்.

ராஜவந்தான் ஆலயத்தை புனரமைப்பது தொடர்பில் அரசாங்க அதிபருடன் பேசுகையில் அவர் குறிப்பிடுறார் அவ்விடயம் தொடர்பில் பௌத்த பிக்குவிடம் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர் குறிப்பிடுகிறார்.

அரசாங்க அதிபரை காட்டிலும்,பௌத்த தேரருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.தமிழர்களின் இனவழிப்பு மிக தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எவ்விரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.