வட, கிழக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் சடலங்கள் கொழும்பில் கரையொதுங்குகின்றனவா ?

160 0

அண்மைக்காலமாக கொழும்பிலும் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் அடையாளங்காணப்படாத சடலங்கள் கரையொதுங்கிவரும் நிலையில், அவை ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சடலங்களாக இருக்கக்கூடுமா? என்று சந்தேகம் வெளியிட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், இதுகுறித்து அவதானம் செலுத்துவதுடன் அவசியமேற்படின் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான மாதிரிகள் அச்சடலங்களிலிருந்து பெறப்பட்டு உரியவாறு பதப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து முன்னெடுத்துவரும் கவனயீர்ப்புப்போராட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் 2,000 நாட்களை எட்டவுள்ளது.

அதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமுன்றலில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமது தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தின் 2,000 ஆவது நாளை அடையாளப்படுத்தும் விதமாக எதிர்வரும் 12 ஆம் திகதி மேற்படி கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் நீதிக்கான இப்போராட்டத்தில் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கந்தசுவாமி ஆலயமுன்றலில் ஆரம்பமாகவுள்ள இந்தக் கவனயீர்ப்புப்போராட்டம் பேரணியாகச்சென்று டிப்போ சந்தியில் நிறைவடையும்.

அதுமாத்திரமன்றி பேரணியின் நிறைவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் கிளைக்காரியாலயத்தின் ஊடாக ஐ.நா வதிவிடப்பிரதிநிதிக்கான மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இது இவ்வாறிருக்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்பதற்காக தமது சங்கத்தின் சார்பில் குறைந்தபட்சம் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகக் வீரகேசரியிடம் தெரிவித்த வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி, தற்போது இலங்கையின் தெற்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களும் தமது நீண்டகாலப்போராட்டமும் வேறுபட்ட நோக்கங்களை இலக்காகக்கொண்ட மாறுபட்ட போராட்டங்கள் என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக்கொண்டவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதுமாத்திரமன்றி அண்மைக்காலமாக கொழும்பிலும் கொழும்பை அண்மித்த பகுதிகளிலும் அடையாளங்காணப்படாத சடலங்கள் கரையொதுங்கிவரும் நிலையில், அவை ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சடலங்களாக இருக்கக்கூடுமா? என்றும், ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஏற்படக்கூடிய அழுத்தங்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுகின்றதா? என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், இதுகுறித்து அவதானம் செலுத்துவதுடன் அவசியமேற்படின் டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான மாதிரிகள் அச்சடலங்களிலிருந்து பெறப்பட்டு உரியவாறு பதப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தோடு இதற்குரிய நடவடிக்கைகளை இயலுமானவரை விரைவில் முன்னெடுப்பதற்கு மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.