மட்டக்களப்பு – வாகநேரி பகுதியில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் மீது குளவி கொட்டு

186 0

மட்டக்களப்பு வாகநேரி பெட்டைக் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பிரதேசத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டு வந்தனர்.

வழக்கம்போல் நேற்று காலை (3) மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எங்கேயோ இருந்து வந்த குளவிக் கூட்டம் அவர்களை துரத்தி துரத்தி கொட்டியுள்ளது.

குளவியின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக குளத்து நீரினுள் மூழ்கியும், கொண்டு சென்ற துணிகளை போர்வையாக பயன்படுத்தியும்  பிடித்த மீன்களை கைவிட்டு தப்பித்து பாதுகாப்பு பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலையடன் தெரிவித்தனர். 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.