ஜோன்ஸ்டன், சனத் , மிலான், டொன், சதா நாலக்கவின் தொலைபேசிகளை சி.ஐ.டி.யில் ஒப்படைக்க உத்தரவு

365 0

மைனா கோ கம, கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மிலான் ஜயதிலக, சனத் நிசாந்த ஆகியோரினதும் சிங்கள, பெளத்த செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் டொன் பிரியசாத், பாதாள உலக தொடர்புகளை உடைய சதா நாலக எனும் நாலக விஜேசிங்க ஆகியோரது கையடக்கத் தொலைபேசிகளை விசாரணையாளர்களான சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்க கோட்டை நீதிமன்றம் இன்று ( 03) உத்தரவிட்டது கோட்டை நீதிவான் திலின கமகே இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

மைனா கோ கம,கோட்டா கோ கம மீதான அரசாங்க ஆதரவாளர்களின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, இதுவரை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள 36 சந்தேக நபர்களில் 35 பேர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக , மேல் நீதிமன்றில் வழக்கொன்று தொடர்பில் ஆஜராவதால் அவர் மட்டும் ஆஜராகவில்லை என அறிவிக்கப்பட்டது.

விசாரணையாளர்கள் சார்பில், விசாரணை அதிகாரியான சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 இன் பொறுப்பதிகாரி உபுல் கல்வலகே தலைமையிலான குழுவினர் ஆஜராகிதுடன் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம ஆஜரானார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன ஆஜரானார்.சந்தேக நபர்களுக்காக சட்டத்தரணி கமகே, சானக அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.இதன்போது நீதிமன்றில் விசாரணை நிலவரம் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம விளக்கினார்.

(இவை தொடர்பில் உத்தரவுகளை வழங்கிய நீதிவான், சந்தேக நபர்களின் தொலைபேசி கோபுர தரவுகளையும் பெற்று ஒப்பீடு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க சி.ஐ.டி.யை பணித்தார்). கடந்த மே 9 ஆம் திகதி, இந்த தாக்குதல் சம்பவம் பதிவான போது, அலரி மாளிகைக்கு ஆட்களை அழைத்து வந்தமையை மையப்படுத்தியும் விசாரணை நடாத்தப்பட்டது.

இதன்போது 25 இ.போ.ச. பஸ் வண்டிகளிலும் 23 தனியார் பஸ் வண்டிகளிலும்  அலரி மாளிகைக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதில் 13 தனியார் பஸ் வண்டிகள் மற்றும் 13 இ.போ. ச. பஸ் வண்டிகள் தொடர்பில் சாட்சிப் பதிவுகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது முக்கியமான சாட்சியம் ஒன்று வெளிப்பட்டது. சாட்சியாளரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் அடையாளத்தை மறைத்து சாட்சியம் என்ன என்பது தொடர்பில் மட்டும் மன்றுக்கு தெரிவிக்கின்றேன்.

ஒரு இ.போ.ச. டிப்போவிலிருந்து குறித்த சாட்சியாளருக்கு வழங்கப்பட்ட பணியின் பிரகாரம், அவர் ஒரு அரசியல்வாதியின் அலுவலகத்துக்கு பஸ்ஸை செலுத்திக்கொண்டு கடந்த மே 9 ஆம் திகதி சென்றுள்ளார். அந்த அலுவலகத்தில் மது போதையில் இருந்த குழுவினர் இரும்பு பொல்லுகளுடன் அந்த பஸ் வண்டியில் ஏறியதாக குறித்த சாட்சியாளர் தெரிவித்துள்ளார். அவர்கள் அலரி மாளிகைக்கு அருகே இறங்கும் போதும், அந்த இரும்பு பொல்லுகளை உடன் எடுத்துச் சென்றதாக சாட்சியாளர் கூறியுள்ளார். இது மிக முக்கியமான சாட்சியமாகும்.

;மே 9 ஆம் திகதி பொலிஸார் கடமைகளை சரியாக செய்ய தவறினார்களா எனும் விசாரணை ; நிறைவு செய்யப்பட்டு கோவை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளது. ‘ என தெரிவித்தார்.

இதனையடுத்து விசாரணைகளில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் கேள்வி மன்றில் எழுப்பட்ட நிலையில், மேலதிக வழக்கு விசாரணைகள் இம்மாதம் 24 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது .