சர்வகட்சி தேசிய வேலைத்திட்டத்தினை தயாரிப்பதற்கு கூட்டமைப்பு பூரண ஆதரவு : ஜனாதிபதி ரணில் உடனான சந்திப்பில் தெரிவிப்பு

266 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள சர்வகட்சி தேசிய வேலைத்திட்டத்தினை தயாரிக்கும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரணமான ஆதரவினைத் தெரிவிக்கும் என்று தெரிவித்துள்ளது.

எனினும் சர்வகட்சி தேசிய வேலைத்திட்டத்தினைப் பொறுத்தே சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக முடிவெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்தல், காணி அபகரிப்புக்களை நிறுத்துதல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணை ஆரம்பித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைள் எடுக்கப்படுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று  புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்தச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திடீர் உடநலக்குறைவினால் கலந்து கொண்டிருக்கவில்லை. அத்துடன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான, கலையரசனும் பங்கேற்றிருக்கவில்லை.

இந்நிலையில், கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிறிதரன், சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், சாணக்கியன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பாக, கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிடனான சந்திப்பின் ஆரம்பத்தில், இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்காக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்குரிய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச்சட்ட மூலத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்ற விடயத்தினை நாம் குறிப்பிட்டோம். அந்த விடங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

அதற்கு அடுத்தபடியாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனதாபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஏற்கனவே கோட்டாபய ராஜபக்ஜ சில இணக்கப்பாடுகளை வெளியிட்டுள்ள நிலையில் அந்தச் செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதற்குரியநடவடிக்கைள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பதிலளித்தார்.

அடுத்த கட்டமாக, வலிந்து காணப்பட்டவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதனையடுத்து வடக்கு,கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காணிகளை அபகரிக்கும் நோக்கில்முன்னெடுக்கப்படும் காணி அளத்தல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதுமட்டுமன்றி காணிகள் அபகரிக்கப்படுதலுக்கான நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என்பது குறித்தும் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

இவ்விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

தொடர்ந்து, சர்வகட்சி தேசிய வேலைத்திட்டத்தினை தயாரிப்பதற்கு பூரணமான ஆதரவளிப்போம் என்று குறிப்பிட்டதோடு, அந்த வேலைத்திட்டத்தின் இறுதி வடிவத்தின் அடிப்படையில் கூட்டமைப்பில் உரையாடியே சர்வகட்சி அரசில் பங்கேற்பதா இல்லையா என்பதை தீர்மானிப்போம் என்று ஜனாதிபதியிடத்தில் கூறினோம் என்றார்.

இதேவேளை, வடக்கு,கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்ககூடாது என்றும், ஏற்கனவே நீங்கள்(ஜனாதிபதி ரணில்) பிரதமராக இருந்தபோது அதற்கான வெளியொன்று வழங்கப்பட்டடிருந்தது என்றும் சிறிதரன் எம்.பி குறிப்பிட்டார். குறிப்பாக, துயிலுமில்லங்களுக்கு சென்று நினைவேந்துவதற்கு இடமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன், வடக்கு, கிழக்கை மையமாக வைத்து ஏற்கனவே இடைக்கால நிர்வாக சபை, சுனாமிக் கட்டமைப்பு போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது வெளிநாட்டு முதலீடுகளையும் உள்ளீர்க்கும் வகையில் இடைக்கால நிரந்தர நிர்வாக சபையொன்றை ஸ்தபிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும் முன்மொழிந்தார்.

அதேநேரம், சித்தார்த்தன் எம்.பி, சர்வ கட்சி அரசாங்கத்தின் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று நேரடியாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து, கோவிந்தன் கருணாகரம் எம்.பி, ஜனாதிபதியின் அக்கிராசன உரையின்போது வடக்கை மட்டும் அபிவிருத்தி விடயத்தில் குறிப்பிட்டமையை சுட்டிக்காட்டியதோடு, கிழக்கு மாகாணத்தின் நிலைமைகளையும், தேவைப்பாடுகளையும் வெளிப்படுத்தினார் .