பராயமடையாத பெண் பிள்ளைகள் திருமணத்திற்காக பெற்றோரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மலைநாட்டு விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் (கண்டியர் திருமண சட்டம்) உள்ள ஏற்பாட்டினை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள இது குறித்த சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (2) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெளிவுபடுத்துகையில்,
மலைநாட்டு விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் (கண்டிய திருமண சட்டம்) திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய பராயமடையாத பெண் பிள்ளைகள் பெற்றோரின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஏற்பாடு காணப்படுகிறது. இது நாட்டில் நடைமுறையிலுள்ள வழமையான அடிப்படை சட்டத்திற்கு முரணான ஏற்பாடாகும்.
எனவே அந்த திருத்தத்தினை நீக்குவதற்கும் , அதில் காணப்படும் ஒவ்வாமையை நீக்குவதற்காகவும் சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் , பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2015 இல் நான் நீதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அதன் போது நியமிக்கப்பட் விசேட நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கமைய திருத்தங்களுடனான சட்ட மூலமொன்றை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி பதவி வகித்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது காதி நீதிமன்றத்தை நீக்குதல் , பெண்களின் விருப்பத்தினைக் கோரல், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கவனதத்தில் கொண்டு புதிய சட்ட மூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

