கட்சி உறுப்பினர்களை அமைச்சுப் பதவிகள் ஊடாக இணைத்துக்கொள்வதை சர்வக்கட்சி அரசாங்கம் என கருத முடியாது – விமல் எச்சரிக்கை

240 0

அரசியல்,சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் சர்வக்கட்சி மாநாட்டை விரைவாக நடத்த வேண்டும். அரசியலமைப்பு திருத்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகள் உள்வாங்கப்படவில்லை.

அரசியலமைப்பு உருவாக்கம் விவகாரத்தில் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டையும் பெற்றுக்கொள்ள அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியினை சாதகமாக கொண்டு இலங்கை தேசியத்தை வீழ்த்த பிற தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டு வருகிறோம்.

உங்களின் பழைய ஆலோசகர்களின் ஒன்றினைப்புடன் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கான கொள்கையினை வகுத்தால் அதனை அரசசியல் கட்சிகளும்,மக்களும் ஏற்றுக்கொள்ள போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் காலத்தில் பிரதமராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து ஜனாதிபதியாக பதவியேற்கும் வரை சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு எவ்வித முறையான செயற்திட்டங்களையும் பகிரங்கப்படுத்தவில்லை.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சர்வக்கட்சி மாட்டை நடாத்துமாறு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு முன்னர் சர்வக்கட்சி மாநாட்டின் ஊடாக சர்வக்கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளை பகிரங்கப்படுத்துவதில் தவறொன்றுமில்லை.

தன்னிச்சையான முறையில் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ படிப்பினையை கற்றுக்கொண்டமை முக்கியமானதாக கருதப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் ஊடாக அரசியல் கட்டமைப்பு முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாங்கள் முன்வைத்த யோசனைகள் தற்போது வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிட்டுள்ள திருத்த வரைபில் உள்வாங்கப்படவில்லை. அரசியலமைப்பு திருத்த விடயத்தில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை முதலில் இணக்கப்பாடுடன் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்கமைய சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கொள்கை திட்டத்தை நாட்டு மக்களுக்க பகிரங்கப்படுத்த வேண்டும்.சர்வக்கட்சி அரசாங்கத்தில் முறையான மாற்றத்தை ஏற்படுத்தாமல் கட்சி உறுப்பினர்களை மாத்திரம் அமைச்சு பதவிகள் ஊடாக இணைத்துக்கொள்வதை சர்வக்கட்சி அரசாங்கம் என கருத முடியாது என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும் என்றார்.