தானிஸ் அலிக்கு 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

281 0

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் போராட்டக்காரர்கள் ; பலர் அத்து மீறி நுழைந்து, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி ; கடமைக்கு இடையூறு விளைவித்ததாக ; கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போராட்டக்க்காரரான தானிஸ் அலியை எதிர்வரும் ஆகஸ்ட் 15 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டது.

அவர் சார்பில் இன்று முன் வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம், தொடர்பிலான நீதிமன்றின் உத்தரவை அன்றைய தினம் அறிவிப்பதாகவும் இதன்போது நீதிமன்றம் அறிவித்தது.

குருணாகல் – வேபட பகுதியைச் சேர்ந்த தானிஸ் அலி ; பேலும் பல நூறு ஆர்ப்பாட்டக்க்காரர்களுடன் ரூபவாஹினிக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் விசாரணைகள் தொடரும் நிலையில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த உத்தரவிடுமாறும் விசாரணைகளை முன்னெடுக்கும் கறுவாத்தோட்டம் பொலிஸார் கோரினர்.

எனினும் , குறித்த சந்தேக நபரின் கைது முழு உலகும் பார்க்கும் வண்ணம் விமானத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், புறம்பான அடையாள அணிவகுப்பு தேவை இல்லை என தெரிவித்த கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க, அடையாள அணிவகுப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந் நிலையில் சந்தேக நபர், ரூபவாஹினிக்குள் அத்து மீறி நுழைந்து, அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தி முன்னெடுத்த நடவடிக்கைகள் ஊடாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பொதுச் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றில் அறிக்கையிட்டு சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க கோரினர்.

எனினும் சந்தேக நபருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னி நாயக்கவின் தலைமையில் ஆஜரான சட்டத்தரணிகள் குழாம், பொலிஸார் கூறுவதைப் போல் எந்த அத்துமீறலும் ரூபவாஹினுக்குள் இடம்பெறவில்லை எனவும், தனது சேவை பெறுநர் அனுமதி பெற்றே சென்றதாகவும் குறிப்பிட்டு பிணை விண்னப்பம் செய்தார்.

இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த பிரதான நீதிவான் நத்தன அமரசிங்க, பிணைக் குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிப்பதாக கூறி அதுவரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் தானிஸ் அலி, கடந்த ஜூலை 26 ஆம் திகதி டுபாய் செல்லும் விமானத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் கோட்டை நீதிமன்ற வழக்கில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்து மீறியதாக கூறப்படும் விவகாரம் தொடர்பிலான வழக்குக்காக அவர் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது .