பாராளுமன்றில் பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை வென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொள்ள வேண்டும். பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. ராஜபக்ஷர்கள் அரச நிர்வாகத்தில் பங்குக்கொள்ளாமலிருந்தால் நாட்டு மக்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் ;01 ஆம் திகதி இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்தில் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியலமைப்பு திருத்தம்,பாராளுமன்ற மட்டத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள கண்காணிப்பு குழுக்கள்,ஆகிய விடயங்கள் தொடர்பில் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை,மாறாக பொது விடயங்கள் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மற்றும் கண்காணிப்பு தெரிவு குழு தொடர்பில் கட்சி ரீதியாகவும்,தனிப்பட்ட ரீதியாகவும் யோசனைகளை முன்வைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
ஜனாதிபதியின் சிம்மாசன பிரசங்கத்தில் ஜனநாயக பாதுகாப்பு, பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் தொடர்பில் தெளிவாக விளக்கம் காணப்படும் என எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் பொதுஜன பெரமனவின் நம்பிக்கையை வென்று விட்டார்.இருப்பினும் மக்களின் நம்பிக்கையை அவர் வெல்லவில்லை, பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது.
ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் இடம்பெறும் வரையில் நிர்வாகத்தில் உள்ள அரசாங்கத்தில் ராஜபக்ஷர்களுக்கும்,ஊழல் மோசடியாளர்களுக்கும் எவ்வித அமைச்சு பதவிகளும் வழங்க கூடாது.
மக்களால் வெறுக்கப்படுவர்களை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தினால் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடையும்.
பொருளாதார மீட்சிக்காக பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என குறிப்பிடும் அரசியல்வாதிகள், மக்களின் அபிலாசைக்கமைய செயற்பட வேண்டும்.
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

