அம்பந்தோட்டை வரும் சீன இராணுவ கண்காணிப்பு கப்பல் : கடும் அதிருப்தியில் இந்தியா

256 0

சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் – 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் டெல்லி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன் குறித்த கப்பலின் வருகைக்கான காரணம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட காலப்பகுதியில் அதன் செயற்பாடுகள் என்பன குறித்து முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

சீன இராணுவ கண்காணிப்பு மற்றும் ஆய்வு கப்பலின் வருகையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றமையால் இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக கொழும்பிற்கு டெல்லி உயர் மட்டம் தகவல் அனுப்பியுள்ளது.

யுவான் வோங் – 5 இராணுவ கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி இரவு 11 மணிக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது. ஜியாங்கியின் துறைமுகத்திலிருந்து கிழக்கு சீன கடல் ஊடாகவே  யுவான் வோங் – 5 கப்பல் இலங்கை நோக்கிய பயணித்தை ஆரம்பித்துள்ளது. செயற்கைக்கோள் மற்றும் அதி நவீன செய்மதி தொழில்நுட்பத்தில் யுவான் வோங் – 5 கப்பல் கண்காணிப்பு நடவடிக்கைகளை  முன்னெடுக்க கூடியது.

சீனாவின் மிக நவீன ; செய்மதிகளை கண்காணிக்கும் கப்பலாக யுவான் வாங் – 5 குறிப்பிடப்படுகின்றது. மறுப்புறம் செய்மதிகள் மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் செலுத்தப்படுவதை கண்காணிக்கும் திறன்  உள்ளிட்ட பல்வேறு நவீன கண்காணிப்பு வசதிகளை கொண்டுள்ளது. ; சீன இராணுவத்தின் மூலோபாய படையணியே இந்த கப்பலை இயக்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது வெளிக்கள இராணுவ தளமாக பயன்படுத்த கூடும் என்று பல்வேறு நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கைகளை விடுத்திருந்தன.

இவ்வாறானதொரு நிலையிலேயே  இந்தியா கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை – இந்திய கடற்பரப்பை பொறுத்த வரையில் இரு தரப்புமே பரஸ்பர நன்மைகளின் அடிப்படையில் கையாளப்படுகின்றது. எனவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நகர்வுகள் இந்த கடல்பரப்பில் காணப்படுகின்றமையை ஏற்க முடியாது என இலங்கைக்கு டெல்லி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.