ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் 20 ஓவர் போட்டி நடந்து கொண்டிருந்தது. போட்டியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு அரங்கில் குண்டு வெடித்தது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
குண்டுவெடிப்பின்போது மைதானத்தில் தலிபான்கள் அரசின் முக்கிய பிரதிநிதிகளும் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் உள்பட முக்கிய பிரமுகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி நசிப்கான் கூறும்போது, மைதானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 ரசிகர்கள் காயம் அடைந்தனர். வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றார். முதற்கட்ட விசாரணையில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

