நெருக்கடியான சூழலில் சவால்களை வெற்றிகொள்ள தற்துணிவுடன் செயற்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தலைவர் தெரிந்துக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் எத்தன்மையில் அமையப்பெற வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
அமைச்சரவையின் எண்ணிக்கை 30இற்குள் வரையறுக்கப்பட வேண்டும், ஆறு மாதங்கள் அல்லது ஒருவருட காலத்திற்குள் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை மகாநாயக்க தேரர்கள் உட்பட சகல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
ஆகவே தற்போதைய நிலையில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் குறுகிய அரசியல் நோக்கங்களை விடுத்து நாட்டுக்காக சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைய வேண்டும்.
நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை ஏற்பது சிறந்த தலைமைத்துவம் என்பதை எதிர்க்கட்சி தலைவர் விளங்கிக்கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தில் ஒன்றினைந்தால் தானும் நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் என கருதியே எதிர்க்கட்சி தலைவர் சர்வக்கட்சி அரசாங்கத்தின் இணைவதை தவிர்த்து வருகிறார். சர்வக்கட்சி அரசாங்கம் தோற்றம் பெறாவிடின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான பலவீனமான அரசாங்கமே மீண்டும் தோற்றம் பெறும்.
மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்பதை சகல அரசியல் கட்சிகளும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சற்று பொறுமையுடன் செயற்பட வேண்டும். இரண்டரை வருடகாலமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பை ஓரிரு மாதங்களில் மாத்திரம் சீர் செய்ய முடியாது. தற்போதைய நிலையில்சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

