புதிய ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயலாற்ற எதிர்பார்த்துள்ளதாக பன்னாட்டு இராஜதந்திரிகள் தெரிவிப்பு

191 0

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வருங்காலங்களில் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ; உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள், அமைதியானதும் ஸ்திரமானதுமான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளடங்கலாக ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல் என்பன இன்றியமையாதவையாகும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக 20 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவுடன் இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, 21 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உயர்மட்டப்பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளும் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கப்பதிவுகளின் ஊடாகப் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துத்தெரிவித்திருப்பதுடன் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அவர் முன்னெடுக்கவேண்டிய பணிகளையும் நினைவூட்டியுள்ளனர்.

பிரிட்டனின் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் தாரிக் அஹமட்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வருங்காலங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றேன். தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண்பதற்கு அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கப் பொறிமுறையொன்று இன்றியமையாததாகும். அதன்படி அத்தியாவசியமான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளடங்கலாக அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்குமாறு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் .

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர்

அமைதியானதும் ஸ்திரமானதுமான இலங்கைக்கு பேச்சுவார்த்தைகள், ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துவெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளடங்கலாக ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு மதிப்பளித்தல் என்பன இன்றியமையாதவையாகும். அந்தவகையில் இலங்கை மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பினருடனும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

அதேவேளை அரசியலமைப்பிற்கு அமைவாக புதிய ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் கைமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் அறிந்துள்ளோம். எனவே தற்போது அனைத்துத்தரப்பினரும் பொருளாதார நெருக்கடிக்கும் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வுகாண்பது குறித்த செயற்திறன்மிக்க கலந்துரையாடல்களில் ஈடுபடவேண்டியது அவசியமாகும்.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்

நாம் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சவால்மிகுந்த தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்தல், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், அனைத்து இலங்கையர்களுக்கும் ஸ்திரமானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு அனைத்துத்தரப்பினரும் தமது முயற்சிகளை இரட்டிப்பாக்கவேண்டியது அவசியமாகும் .

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்

அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு உள்ளடங்கலாக அனைத்து இலங்கையர்களினதும் தேவைகளைப் பூர்த்திசெய்வதை முன்னிறுத்திய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம். அதேவேளை அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளடங்கலாக ஜனநாயகத்தையும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சிநிர்வாகத்தையும் பாதுகாக்குமாறு அனைத்துத்தரப்பினரையும் வலியுறுத்துகின்றோம்.

கனேடிய உயர்ஸ்தானிகராலயம்

இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமைவாகப் பாராளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். நாட்டுமக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணக்கூடியவகையில் உடனடி அரசியல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் ஊக்குவிக்கின்றோம். அத்தோடு இந்நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதை இலக்காகக்கொண்டு செயற்படும்போது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிப்பதுடன் அவற்றை மேம்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியம்

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருக்கின்றார். இது தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுடன்கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றோம். அதேவேளை பொருளாதார மறுசீரமைப்பு, தனிநபர் சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகள் என்பன அவசியமாகும். இலங்கை மக்களுக்கான எமது ஆதரவு தொடரும்.