வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் இன்று தெரிவித்னர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் 4 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகரால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிரோசன் தலைமையிலான பொலிசார் துரித நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சிதம்பரபுரம் பகுதியில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட 4 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை நீதிமன்றில முற்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

