ஜனாதிபதி தெரிவு விவகாரத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் விலைபோயுள்ளனர் – அநுரகுமார

140 0

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி தெரிவு விவகாரத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் விலைபோயுள்ளார்கள். பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்குமிடையில் நீண்டதொரு இடைவெளி தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்துள்ளது. பாராளுமன்றத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படும் எந்த அரசாங்கத்திற்கும் நீண்ட ஆயுள் கிடையாது, ஆகவே வெகுவிரைவில் மக்களாணைக்கு செல்வது அவசியமாகும் என அநுரகுமார திசாநாயக்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (20) விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தின் ஊடாக தெரிவு செய்யபட்டுள்ள புதிய ஜனாதிபதி நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

பாராளுமன்றில் எதிர்தரப்பு ஒன்று தோற்றம் பெற்றுள்ளதை விளங்கிக்கொள்ள முடிகிறது.இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்பதும் தேர்தல் பெறுபேறுகள் ஊடாக உணர்த்தப்பட்டுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட போது மாறுப்பட்ட தன்மையை அவதானிக்க முடிந்தது. டலஸ் அழகபெருமவை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்து அதனை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் உறுதிப்படுத்தினார்.

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பரிந்துரைத்தார், அதனை பொதுஜன பெரமுன அல்லாதவர் உறுதிப்படுத்தினார்.

தற்போதைய பெறுபேற்றை கண்டு வியப்படையவுமில்லை,துவண்டு போகவுமில்லை.இதுதான் நாட்டின் பாராளுமன்றத்தின் உண்மையான நிலைபாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிலை உண்மையில் சமூகத்தில் கிடையாது.

மக்களின் எதிர்பார்ப்பை பாராளுமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளோம் என எவராவது கருதுவார்களினாயின் அது முற்றிலும் மாயையானது என கருத வேண்டும்.

நாட்டு மக்களின் விருப்பத்திற்கு முரனான விம்பம் பாராளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.நாட்டு மக்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் வேறுப்பாடும்,பெரும் எதிர்ப்பும் தோற்றம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியவற்றை எதிர்காலத்தை கருத்திற்கொள்ளாமல் தெரிவு செய்ய வேண்டும் என சகல தரப்பினரிடமும் குறிப்பிட்டோம்.

பிரதமர் பதவிக்கு சபாநாயகர்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இதனை ஒரு சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய பதவிகளை பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் பெண் பிரதிநிதிகளுக்கு வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் எம்முடனான சந்திப்பின் போது குறிப்பிட்டார்.

நெருக்கடியன சூழ்நிலையில் ஜனாதிபதி,பிரதமர் ஆகிய பதவிகளில் ஒரு பதவியை வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கினால் நாட்டில் பாராளுமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் கௌரவம் ஏற்படும்.

அதேபோல் ரவூப் ஹக்கீமின் யோசனைக்கமைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி பெண் பிரதிநிதிகளுக்கு வழங்கினால் அது முழு நாட்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும்.இவ்வாரான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்க தயார் என குறிப்பிட்டோம்.

ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தின் பதவி காலம் 6மாத காலாத்தை வரையறுத்ததாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்,முழு நாட்டு மக்களினதும் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

எதிர்கால அரசியல் நோக்கமில்லாத வகையில் 06 மாத காலத்திற்கு வரையறுக்கப்பட்ட அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்.

அமைச்சரவையின் எண்ணிக்கை 10ஆக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டோம்.இருப்பினும் எமது யோசனை தோற்கடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்தே வேட்பாளராக போட்டியிட்டேன்,பெறுபேறு இவ்வளவு தான் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே அறிவேன். டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு என ஆளும் தரப்பினர்கள் உட்பட அரசியல் கட்சிகள் குறிப்பிட்டன இருப்பினும் பெறுபேறு மாற்றயமடைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்திலும் விலைபோயுள்ளார்கள். இதனை எவருக்கும் மறுக்க முடியாது.வரலாற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

மக்களின் விருப்பம் பாராளுமன்றிற்கு கிடையாது. மககளாணை பாராளுமன்றிற்கு கிடையாது. பாராளுமன்றில் ஊடாக ஸ்தாபிக்கப்படும் எந்த அரசாங்கத்திற்கும் நீண்ட ஆயுள் கிடையாது,ஆகவே வெகுவிரைவில் மக்களாணைக்கு செல்வது அத்தியதவசியமானது என்றார்.