முதலமைச்சராகும் எண்ணத்தில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர் – பண்ருட்டி ராமச்சந்திரன்

230 0

அதிமுக பிரமுகரும் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மற்றும் அவரது மகன் மனோஜ் பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பி.எச். பாண்டியன், ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணமடைந்த திகதி வரை மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அதன்பின் அதிமுக கட்சி மற்றும் ஆட்சியின் போது நடந்த மாற்றங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை கூறினார்.

இந்நிலையில், பி.எச். பாண்டியன் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக மூத்த தலைவர்களான செங்கோட்டையன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

விளக்கங்கள் சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. எந்த இயக்கமாக இருந்தாலும் சிலர் எதிர்க்க தான் செய்வார்கள்.

மத்திய அரசு தலையீடு இருப்பதாக நினைக்கவில்லை. மத்திய அரசை சந்தேகப்படுவது தவறு. தற்போது தான் கடிதத்தை கொடுத்துள்ளோம். அதனை ஏற்றுக் கொண்டுள்ளார். விரைவில் நேரம் ஒதுக்கி சொல்வார்.

பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை. முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் இயங்கி வருகின்றனர். ஸ்டாலின் செயல் தலைவராக உள்ளார். அதனால் தான் சும்மா இருக்க முடியாமல் டெல்லி சென்றுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக கட்டுக்கோப்புடன் செயல்பட்டு வருகிறது. கட்சிக்குள் ஒரு பிரச்சனை என்றால் எடுத்துச்சொல்ல வேண்டிய இடம் பொதுக் குழு. ஆனால் அவர் நேரடியாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அனைத்து உறுப்பினர்களிடமும் வாக்கெடுப்பு நடத்த அவகாசம் இல்லாததால் பொதுக்குழு சசிகலாவை பொதுச்செயலாளராக பரிந்துரைத்தது. அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளரை பரிந்துரைக்கலாம், பிறகு தேர்வுசெய்யப்பட்டவர் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெறலாம்.

அதிமுகவின் முடிவுகளுக்கு எதிராக மக்கள் இருக்கின்றனர் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் யார் என்பதை முடிவுசெய்வது அதிமுகவின் உட்கட்சி விவகாரம்என தெரிவித்தார்.