அறிவிக்கப்படாத முடக்கத்தில் இலங்கை

242 0

இலங்கை அறிவிக்கப்படாத ஒரு முடக்க நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. முழு முடக்கம் என்றால் என்ன என்பதற்கு கொரோனா காலமே இலங்கை மக்களுக்கு பதில் சொன்னது. அப்படியானதொரு தொடர்ச்சியான முடக்க நிலையை இலங்கை மக்கள் என்றுமே அனுபவித்ததில்லை. 2020 மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து ஜுன் மாதம் வரை இலங்கை மக்கள் வீட்டிலடைந்து கிடந்தனர்.

அது அச்சுறுத்தும் நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டதொன்று. ஆனால் இன்று கொரோனாவும் இல்லை ஊரடங்கும் இல்லை. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சகல பொது போக்குவரத்துகளும் செயலிழந்த நிலையில் ஆங்காங்கே ஒரு சில இ.போ.ச பஸ்களும் இரயில் வண்டிகளும் மாத்திரம் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் மக்கள் நடமாட்டம் இல்லாது நாட்டின் பல மாவட்டங்களின் நகர்புறங்கள் ஸ்தம்பித்து போயுள்ளன.

போதாததற்கு 4 ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து ஒரு வாரத்துக்கு சகல பாடசாலைகளும் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்து விட்டது. கிராம மற்றும் தோட்டப்புறங்களிலிருந்து மக்கள் நகர்புறங்களுக்கு வருவதற்கு வாகனங்கள் இல்லை. நடந்து வரவும் முடியாது. இதனால் நகரங்களில் வர்த்தக ஸ்தாபனங்கள் சோபையிழந்துள்ளன. சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருட்கள் என்ற அரசாங்கத்தின் ஒரு பக்கச்சார்பான அறிவித்தலால் ஏனைய சகல அரச சேவைகளும்  முடங்கிப்போயுள்ளன. அரசாங்கம் அறிவித்த சுகாதார சேவைகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் கூட முறையாக எரிபொருட்கள் கிடைக்கவில்லையென்பது முக்கிய விடயம்.
எரிபொருள் பற்றாக்குறை உச்ச நிலையை அடைந்த கடந்த வாரம் ஆரம்பத்தில் நாடு முடக்கப்படும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம் வந்து கொண்டிருந்தன. எனினும் எத்தகைய முடக்கத்தையும் தற்போதைய நிலையில் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லை என்பது தெளிவு. இதன் காரணமாகவே எரிபொருள் விநியோகத்தை  முற்றாக நிறுத்தி விட்டு பின்பு ஒவ்வொரு துறையையும் முடக்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில் தபால் சேவைகள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இடம்பெறும் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் தபால் சேவை பணியாளர்கள் முற்றாக வேலை நிறுத்தத்தில் இறங்கி விட்டனர். இதனால் தபால் சேவைகள் முற்றாக முடங்கியது

எரிபொருள் பற்றாக்குறையால் நாடெங்கினும் கடந்த வாரம் 22 புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்தன. அதையடுத்து புகையிரத சேவை பணியாளர்களும் திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கினர் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பம் என இரயில்வே திணைக்களம் அறிவித்தாலும் சில மார்க்கங்களில் இரயில்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து களவாக டீசல் மற்றும் பெற்றோலை பெற்ற கருப்பு சந்தை வர்த்தகர்கள் தற்போது அதை மும்மடங்கு விலைகளுக்கு விற்று வருகின்றனர். இதை பொலிஸாரும் கண்டு கொள்வதாக இல்லை.

எரிபொருள் நெருக்கடி காரணமாக அரச சேவைகளை மட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகளை உயர் மட்டத்தில் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்கி வருகின்றது. குறித்த இரண்டு சேவைகள் மாத்திரமே அத்தியாவசியமானவை என்ற அதன் அறிவிப்பால் அது தவிர்ந்த ஏனைய அனைத்து அரச சேவைகளும் அத்தியாவசியமில்லையா என்ற எதிர்ப்புக் குரல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இதில் கல்விச்சேவை பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள அதே வேளை, போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் மாணவர்களின் வரவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

யாருக்கு முக்கியத்துவம் வழங்குவது என்ற குழப்பத்தில் அரசாங்கம் தலையை பிய்த்துக்கொள்ள ஆரம்பித்துள்ளது. அதாவது யார் முடிவுகளை எடுப்பது என்ற கேள்வியே தற்போது அரசாங்கத்துக்கு உள்ள பெரும் பிரச்சினைகளாகும். எரிபொருட்களை பெறுவதற்கு ஆவண செய்யவும் என்று உத்தரவிடும் நிலையில் மாத்திரமே ஜனாதிபதி இருக்கின்றார். ஆனால் அதை மாத்திரமே தன்னால் இப்போதைக்கு செய்ய முடியும் என்பதை அவரும் அறிவார்.

தலைநகர் கொழும்பு உட்பட, அதற்கு வெளியே சகல மாவட்டங்களும் முடக்க நிலையை அடைந்துள்ளன. போதாததற்கு மலையகப் பிரதேசங்களில் மழை ஆரம்பித்துள்ளது. இதனால் சகலரும் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். பெற்றோல் வரும் என்று நம்பிக்கையில் குறித்த நகரங்களில் ஆட்டோக்கள், லொறிகள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் அனைத்தும் பல கிலோ மீற்றர் தூரங்களுக்கு பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இல்லாத பெற்றோர் எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர்.

சில இடங்களில் பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பஸ் நிலையங்கள் வெறிச்சோடி போயுள்ளன. ஒரு சில தனியார் பஸ்களைத் தவிர இ.போ.ச பஸ்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்துள்ளது. ; ஊரடங்கு மற்றும் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்ட காலத்தில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வீதிக்கு இறங்கிய மக்கள், தற்போது அறிவிக்கப்படாத ஒரு முடக்கத்துக்கு முகங்கொடுத்துள்ளனர் என்றே கூற வேண்டியுள்ளது.

சிவலிங்கம் சிவகுமாரன்