சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது குழந்தை உயிரிழந்துள்ளது!

100 0

கொழும்பு,ஹோமாகம – மாகமன்ன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிகாயங்களுக்குள்ளாகி பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வசித்து வந்த ரிதுஷி ரணசிங்க என்ற ஆறு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஹோமாகம மாகம்மன பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது உயிரிழந்த ஆறு வயது குழந்தையின் தாய், தந்தை மற்றும் மூத்த சகோதரி ஆகியோர் அறைக்குள் இருந்துள்ளதுடன், அவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது ஆறு வயது குழந்தை பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் போது 47 வயதான தந்தை உயிரிழந்திருந்தார். பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்தவரின் மனைவியும் உயிரிழந்ததுடன், மூன்று நாட்களுக்குப் பிறகு மூத்த மகளும் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு வயது குழந்தையும் உயிரிழந்துள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் லசந்த புத்திக 47, (தந்தை) காளிகா தேவி 35, (தாய்) மற்றும் காவிந்தி ரணசிங்க 19, (மூத்த சகோதரி) , ரிதுஷி ரணசிங்க 06 வயது ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

தீக்காயங்களுக்குள்ளான ஆறு வயது குழந்தை சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதுடன், சடலத்தின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களின் உயிரிழப்புக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், வீட்டில் கொள்கலன் ஒன்றில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.