குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் ரூ.100 உடனடி அபராதம்

136 0

சென்னையில் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று தரம்பிரித்து வழங்குமாறு பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் வைத்தது. குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கடந்த மே மாதம் அறிவித்தது. ஆனால் அபராதம் விதிப்பது இன்னும் தொடங்கப்படவில்லை.

அபராதம் விதிக்கும் நடைமுறைகளை தொடங்கும் முன்பு பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:- குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதில் மாதவரம், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்கள் முன்னணியில் உள்ளது.

இங்கு 80 சதவீதம் பேர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கிறார்கள். மற்ற மண்டலங்களில் சுமார் 60 முதல் 70 சதவீதம் பேர் தரம் பிரித்து கொடுக்கிறார்கள். எனவே இதை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறோம். குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கவில்லை என்றால் உடனடியாக ரூ.100 அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை உடனே தொடங்க விரும்பவில்லை.

இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து மண்டலங்களிலும் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும். அபராதம் விதிக்கும் நடைமுறைகளை தொடங்குவதற்கு முன்பு குடியிருப்பாளர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த தகவல்களை சேகரிக்கும்போது குப்பைகளை ஒப்படைப்பதற்கு முன்பு அவற்றை தாங்களாகவே பிரித்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.