21ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரெஞ்சுப் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு

311 0

21ம் நூற்றாண்டில் உலக மக்கள் தம் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பவர்களாக மாறும் நிலையில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாத்தியப்பாடுகள், எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆகியவற்றை ஆராயும் கருத்தரங்கு பிரஞ்சு பாராளுமன்ற வளாகத்தில் பெப்பிரவரி 3ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அனைத்துலக ஈழத்தமிழரரவையின் அனுசரணையுடனும், பிரஞ்சுப் பாராளுமன்றத்தில் தமிழருக்கான ஆய்வு அமைப்பின் ஆதரவுடனும் பிரான்ஸ் தமிழீழ மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை நடைபெற்றது. பிரஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், சட்டவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

அனைத்துலக ஈழத்தமிழரவையின் சர்வதேசத் தொடர்பாளர் திரு. திருச்சோதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான ஆய்வுக் குழவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி. மரி ஜோர்ஜ் பூபெட், இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அவசியமானது என்பதனை வலியுறுத்தியதுடன், இவ்விடயத்தினை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்லுமாறு பிரஞ்சு வெளிவிவகாரத்துறையிடம் கேட்டுக்கொள்ள இருப்பதாகக் கூறினார்.

இக்கருத்தரங்கில் கலந்துகொள்வதற்கென தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றை தாயக நிலமை, சர்வதேச நாடுகளின் புவிசார் அரசியல்சார்ந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை விடயத்தில் அதிக கவனம் செலுத்திவந்த மேற்குலகம் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் முன்னை அரசாங்கத்திற்கு வழங்கி வந்த அழுத்தங்களைக் கைவிட்டு புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செய்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் விடயத்தில் முன்னைய அரசாங்க காலத்திலிருந்து தற்போதைய அரசாங்கம்

அதிகம் வேறுபடவில்லை எனத் தெரிவித்தார். தமிழ் மக்கள் இன்னமும் கட்டமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டுவருகின்றனர் எனவும் புதிய அரசாங்கத்தினால் நல்லிணக்க முயற்சிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி விசாரணை அவசியமி;ல்லை என அண்மையில் குறிப்பிட்டுள்ளதனையும் எடுத்துரைத்தார்.

மணலாற்றில் ஏற்படுத்தப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக அங்கு காலங்காலமாக வாழ்ந்துவந்த தமிழ்மக்கள் நிலமிழந்து அவதிப்படுவதை விளக்கும் ‘இருளில் இதயபூமி’ ஆவணத்திரைப்படத்திலிருந்து முக்கியபகுதிகளும் இக்கருத்தரங்கில் திரையிடப்பட்டதுடன் பிரஞ்சுமொழியில் விளக்கங்களும் வழங்கப்பட்டது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாற்பாதாண்டு நிறைவுற்றுள்ளதனை குறிப்பிட்டு அத்தீர்மானத்தின் முக்கியத்துவும் பற்றியும் அது நிறைவேற்றப்பட்ட அரசியற் சூழல் பற்றியும் ஊடகவியலாளர் திரு. கோபி இரத்தினம் விளக்கினார்.

அத்துடன் நாடு கடந்த அரசு சார்பில் திரு மகிந்தன் சுப்ரமணியம் சுயநிர்ணயஉரிமையை வெல்லுதல் பற்றி தன்னுடைய கருத்துக்களை முன் வைத்தார்.

பிரான்சிலிருந்து செயற்பட்டுவரும் குர்திஸ் இயக்க பிரநிதிதி, காலனித்துவத்திற்கு எதிரான அமைப்பின் பிரதிநிதி, மனிவுரிமைச் செயற்பாட்டாளர்கள், சட்டவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு கருத்துரை வழங்கியதுடன் உற்சாகமாகக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துலக ஈழத்தமிழரவையின் பேச்சாளர் திரு. ஸ்ரீபன் புஸ்பராஜா முடிவுரையை வழங்கியதுடன், சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியதுடன், சிறிலங்கா தனது மனிதவுரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றும்வரை ஐ.நா. ஒன்றியம் ஏற்றுமதி வரிச்சலுகைகளை வழங்கக் கூடாது என்ற வேண்டுகோளை முன்வைத்து இக்கருத்தரங்கினை நிறைவுசெய்தார்.

-பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை