கேரளாவில் மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு- ஐ.எஸ். தொடர்பா?

579 0

201607141044304864_two-youths-missing-in-kerala-rescued-in-Tirupur_SECVPFகேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 22 வாலிபர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் மாயமான வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிலர், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாக தெரிய வந்தது.இதைதொடர்ந்து கேரள போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அண்மையில் மாயமான வாலிபர்கள் யார்- யார்? என்று விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் இருப்பதாக அம்மாநில சிறப்பு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து கேரள போலீசார் நேற்று இரவு திருப்பூருக்கு வந்தனர். பின்னர் திருப்பூர் மாநகர போலீசார் உதவியுடன் அந்த வாலிபர்களை தேடினர்.

அப்போது 2 வாலிபர்களும் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சல்மான் (வயது 19) மற்றும் அவரது நண்பர் சமீர் (19) என தெரிய வந்தது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அவர்கள் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் மீட்கப்பட்ட 2 வாலிபர்களையும் கேரள போலீசார் இரவோடு இரவாக கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.

மீட்கப்பட்ட வாலிபர்கள் சல்மான், சமீர் ஆகியோர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்தார்களா? என்பது பற்றி கேரள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மஞ்சுநாதா கூறியதாவது:-

கேரளாவில் மாயமான சல்மான், சமீர் ஆகியோரை கேரள போலீசார் அழைத்து சென்றுள்ளனர். கேரள போலீசாரின் விசாரணையில் தான் அவர்கள் மாயமானது குறித்த காரணம் தெரிய வரும்.

திருப்பூர் போலீசார் முதல்கட்ட விசாரணையில் சல்மான், கஞ்சா பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் சல்மான், தனது நண்பர் சமீரை அழைத்து கொண்டு திருப்பூருக்கு வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு கமி‌ஷனர் மஞ்சுநாதா கூறினார்.