வடக்கில் மீண்டும் யுத்தமோ, குழப்பமோ ஏற்படுமானால் அது மஹிந்தவுடன் சுற்றித்திரியும் கூட்டணியின் சதிகளால் மட்டுமே முடியும் -சரத்பொன்சேகா

219 0

வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சரியான முறையில் கையாளப்பட்டு வருகின்றது. இதை மீறி குழப்பங்கள் எதும் ஏற்படுமாயின் அது மஹிந்தவின் கூட்டணியால் மட்டுமே உருவாகும் என அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகம் தொடர்பில் சரத்பொன்சேகா முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போது,

திருகோணமலை துறைமுகத்தை விற்க வேண்டும் என்று ஒருபோதும் நான் கூறவில்லை. இலங்கை அரசுக்கும் அந்த நிலைப்பாடு இல்லை. இந்திய ஊடகம் ஒன்று எனது கருத்தை தவறாக வெளியிட்டுள்ளது. எனினும் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் பாதுகாப்பும், புலனாய்வு செயற்பாடுகளும் மோசமாக உள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர். எனினும் அவ்வாறான ஒரு நிலைமை நாட்டில் இல்லை.

குறிப்பாக வடக்கில் மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான எந்த சூழலும் வடக்கில் ஏற்படவில்லை. நாட்டில் பாதுகாப்பு என்பது மிகச் சரியான முறையில் உள்ளது.

இவை அனைத்தையும் மீறி வடக்கில் மீண்டும் யுத்தமோ, குழப்பமோ ஏற்படுமானால் அது மஹிந்தவுடன் சுற்றித்திரியும் கூட்டணியின் சதிகளால் மட்டுமே முடியும் என குற்றம் சுமத்தினார்.