தமிழ் பகுதியில் வைத்து கொலை செய்வேன்: முஸ்லிம் வர்த்தகருக்கு கொலை அச்சுறுத்தல்!

244 0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரன் மற்றும் அவருடைய உறவினரான கமலக்கண்ணன் போன்றோர் இலஞ்சம் வாங்கியபோது கையும்களவுமாகக் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

முஹமத் தம்பி உவைஸ் என்பவரிடம் இருந்து இலஞ்சப்பணம் பெறமுயன்றபோதே இவர்கள் இருவரும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கையும் களவுமாகக் கைதுசெய்யப்பட்டார்கள்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முஹமத் தம்பி உவைசுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக காத்தான்குடி காவல்துறையிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

‘டான்ஸ் மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் கிருஸ்ண காந்தன் என்பவரே தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அதுவும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், அந்தக் கொலை அச்சுறுத்தல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

‘தமிழ் பிரதேசத்தில் வைத்து உன்னைக் கொலை செய்வேன்’ என்றும், ‘தமிழ் மக்கள் உன்னை கொலைசெய்வார்கள்’ என்றும் கிருஷ்ணகாந் தன்னை அச்சுறுத்தியதாக உவைஸ் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இன்று காலை முஹமத் தம்பி உவைசை அழைத்த சிறிலங்கா பொலிஸார், கொலை அச்சுறுத்தல்விடுத்த கிருஷ்ணகாந்துடன் பேசி சமாதானத்திற்குப் போகுமாறு தன்னை வலியுறுத்தியதாக உவைஸ் எம்மிடம் தெரிவித்தார்.

கொலை அச்சுறுத்தல் விடுத்து, இன முரன்பாட்டைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, அந்தக் குற்றச்சாட்டில் இருந்து அவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் பொலிஸாருக்குப் பின்னால் ‘அரசியல் கரம்’ நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கிருஸ்ணகாந்தன் என்பவர் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2021 ஜுன் மாதத்தில் வியாழேந்திரன் வீட்டின் முன்னால் வியாழேந்திரனுடன் முரண்பட்ட ஒரு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட, வியாழேந்திரன் தரப்பு சம்பந்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் பொதுவெளியில் இருந்துவருகின்ற நிலையில், இந்தக் கொலை அச்சுறுத்தலை உதாசீனப்படுத்தமுடியாது என்று கூறுகின்றார்கள் பிரதேசவாசிகள்.

அத்தோடு, தற்பொழுது நாட்டில் இடம்பெற்றுவருகின்ற பொருளாதாரப் பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் சதிகள் அரச தரப்பால் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுவருகின்ற நிலையில், அரசாங்கத்துடன் நெருக்கமாக இருக்கின்ற வியாழேந்திரன் தரப்பு மேற்கொள்ளும் நடவடிக்கையைகளையிட்டு தமிழ் முஸ்லிம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதும் அவசியம்.