பெசன்ட் நகர் பீச் அழகை கெடுக்கும் குப்பை கழிவுகள்- தினமும் சுத்தப்படுத்த வேண்டுகோள்

126 0

சென்னையில் மெரினா கடற்கரைக்கு அடுத்ததாக பெசன்ட் நகர் கடற்கரையிலும் பொழுது போக்க ஏராளமானவர்கள் கூடுவது வழக்கம். அதேபோல் இங்கு சாலையில் பலர் நடை பயிற்சி மேற்கொள்வார்கள். கடந்த ஒரு மாதமாக கடற்கரையை சுத்தப்படுத்தவில்லை என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகிறார்கள்.

கடற்கரையில் சிதறி கிடக்கும் குப்பைகளால் கடற்கரையின் அழகே பாழ்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கடற்கரை மணலில் உள்ள கடைகள் தான் என்கிறார்கள். குப்பை தொட்டிகளும் தேைவயான இடங்களில் வைக்கப்படாததால் வாங்கி சாப்பிடும் உணவு பொருட்களான மிச்ச மீதிகள், காகிதங்களை கடற்கரை மணலிலும், ரோட்டிலும் போட்டு செல்வதால் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த பகுதிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகையை யொட்டி சுத்தம் செய்யப்பட்டதாகவும் அதன்பிறகு யாரும் தூய்மை பணியை மேற்கொள்ளவில்லை. மெரினா கடற்கரையில் கடைகள் வைப்பது முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெசன்ட் நகரில் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமும் முறையாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால் மாநகராட்சி தரப்பில் கூறும்போது, பீச் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது.இயந்திரம் மூலம் கடல் மணல் சுத்தப்படுத்தப்படும். அந்த இயந்திரம் வேறு இடத்தில் இருந்து வரவேண்டியிருப்பதால் சற்று காலதாமதமாகி விட்டது என்றனர்.