வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஷேட சந்திப்பில்

255 0

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா உரையாடலின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அவுஸ்திரேலியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கலாநிதி ரிச்சர்ட் மார்லஸைச் சந்தித்தார்.

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கத்திற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதில் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அபிவிருத்தி உதவியாக 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அறிவித்தமைக்காக அவர் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் கொவிட்-19 பிரதிபலிப்புக்கான 11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியிலான அவுஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த ஆதரவிற்கு அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார். எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் பேரழிவின் பின்னர் இலங்கையின் கரையோரங்களை சுத்தப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட உபகரணங்களுக்கு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு உதவக்கூடிய வழிகள் குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

ஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள், குடியேற்றம் மற்றும் எல்லை நிர்வாக ஒத்துழைப்பு, இலங்கை மாணவர்களுக்கான அதிக வாய்ப்புக்கள் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம், பாலி செயன்முறை, பொதுநலவாயம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் போன்ற சர்வதேச அமைப்புக்களிலான மேம்பட்ட ஒத்துழைப்பு ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.