நாமல் ராஜபக்ஸவின் கைது குறித்து ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்படும் – கூட்டு எதிர்க்கட்சி

523 0

bandulla_guna-e1356200632969-720x480பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.  சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஏற்கனவே அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்போது மற்றுமொரு முறைப்பாட்டை செய்ய நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஸவின் கைது அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார். மோசடியுடன் நேரடித் தொடர்புடைய தரப்பினர் எவரும் நாமல் மீது குற்றம் சுமத்தவில்லை எனவும், ஊழல் ஒழிப்பு அமைப்பின் அழைப்பாளர் ஜே.வி.பி அரசியல்வாதி வசந்த சமரசிங்கவின் முறைப்பாட்டுக்கு அமையவே நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தொடர்பில் செய்த முறைப்பாடு இதுவரையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஜனநாயக கொள்கைகள் நாட்டில் அழிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.