‘மறுசீரமைப்புக்கள் தமிழர்களின் கோரிக்கையான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உள்ளடக்கியதாக அமையவேண்டும்”

156 0

இலங்கையில் இடம்பெறக்கூடிய மறுசீரமைப்புக்கள் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட ஊழல்கள் மற்றும் பொருளாதார ரீதியிலான குற்றங்களை மாத்திரம் மையப்படுத்தியவையாக அமையக்கூடாது.

மாறாக ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட பாரிய குற்றங்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்வதுடன், தமிழர்களின் நீண்டகாலக்கோரிக்கையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தியவையாகவும் அமையவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது.

போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் அனைவருக்கும் நாம் எமது ஆதரவை வெளிப்படுத்துகின்றோம். தற்போது இலங்கை அதன் வரலாற்றின் மிகமுக்கிய புள்ளியில் இருக்கின்றது.

பல தசாப்தகாலமாக நிலவிய சர்வதேசக்குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு இப்போது ஊழல்கள் மற்றும் பொருளாதார ரீதியிலான குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து விடுபடும் நிலை உருவாவதற்கு வழிவகுத்திருப்பதுடன், இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் அவலநிலைக்கு இதுவே பொறுப்பாகும்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை நீண்டகாலமாக மறுத்துவருகின்ற நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டியது அவசியமாகும்.

அத்தோடு பாரிய மனித உரிமை மீறல் குற்றங்கள், ஊழல் மற்றும் பொருளாதாரக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை மக்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை சர்வதேச சமூகம் வழங்கமுன்வரவேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 1989 ஆம் ஆண்டில் மாத்தளை மாவட்டத்தின் இராணுவக் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியபோது, அங்கு இடம்பெற்ற பல வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்கள் பற்றிய அறிக்கையொன்றை நாம் அண்மையில் வெளியிட்டிருந்தோம்.

இந்த வன்முறைச்சம்பவங்களில் சாதாரண உடையிலிருக்கின்ற பாதுகாப்புத்தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் மற்றும் மிகமோசமான சித்திரவதைகள் என்பன உள்ளடங்குகின்றன.

கடந்த 30 வருடகாலத்தில் பாதுகாப்புத்தரப்பினர் அவர்களது நுணுக்கங்களை மாற்றவில்லை. மாறாக பாதிக்கப்படுகின்ற தரப்புக்களே மாறியிருக்கின்றன.

ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி) படுகொலைகள் மற்றும் 2009 ஆம் ஆண்டில் இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அவருக்கு நெருக்கமானவர்களும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமது அன்பிற்குரியோருக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்வதற்கும், அதனுடன் தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறச்செய்யப்படவேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் உரித்துடையவர்களாவர்.

இருப்பினும் வலிந்து காணாமலாக்கப்படல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்துள்ளனர்.

இது அடுத்த சந்ததி உள்ளடங்கலாக ஒட்டுமொத்த இலங்கைப்பிரஜைகளையும் விலையாகவைத்து அரசியல்சக்திகள் தமக்கு நெருங்கியவர்களைப் பாதுகாப்பதை முன்னிறுத்தி விளையாடுகின்ற பயனற்ற விளையாட்டாகும்.

எனவே சர்வதேச நாடுகள் அனைத்தும் இலங்கை அரசியல்வாதிகள் தமது நாடுகளில் தஞ்சமடைவதற்கான வாய்ப்பை மறுக்கவேண்டும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.